மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் வினியோகம்:கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலாசாமி ஆய்வு


மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் வினியோகம்:கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலாசாமி ஆய்வு
x
தினத்தந்தி 23 July 2023 12:45 AM IST (Updated: 23 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் வினியோகம் தொடர்பாக குமரி மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலாசாமி ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் வினியோகம் தொடர்பாக குமரி மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலாசாமி ஆய்வு மேற்கொண்டார்.

மகளிர் உரிமைத்தொகை திட்டம்

குமரி மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட முகாம் 5-ந்தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் நடக்கிறது.

முதல் கட்ட முகாம் நடைபெற உள்ள பகுதிகளில் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 215 கடைகள், தோவாைள தாலுகாவில் 59 கடைகள், கல்குளம் தாலுகாவில் 126 கடைகள் என 400 ரேஷன் கடைககளை சேர்ந்த மொத்தம் 3 லட்சத்து 4 ஆயிரத்து 504 ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட உள்ளன.

நாளை சிறப்பு முகாம்

இந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த 3 நாட்களாக வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கன்களை வழங்கினார்கள். கடந்த 2 நாட்களில் 1லட்சத்து 17 ஆயிரத்து 328 குடும்பத்தலைவிகளுக்கு விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்கப்பட்டு உள்ளது.

நேற்று 3-வது நாளாக அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம் தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவங்களை வழங்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்த விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) சிறப்பு முகாம் நடக்கிறது.

கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

இந்தநிலையில் குமரி மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலாசாமி நேற்று நாகர்கோவில் வந்தார். பின்னர் அவர் நாகர்கோவில் ஒழுகினசேரி ஆராட்டுத் தெரு, என்.எஸ்.கே தெரு, வடசேரி சோழராஜாகோவில் தெரு ஆகிய பகுதிகளுக்கு சென்று, வீடு-வீடாக ரேஷன் கடை ஊழியர்கள் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணியை ஆய்வு செய்தார்.

மேலும் நாளை தொடங்க உள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து பெறும் சிறப்பு முகாம்கள் எவ்வாறு நடைபெற உள்ளது? என்பது குறித்து சோழராஜா கோவில் தெரு பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மாதிரி முகாமையும், ராமபுரத்தில் ஒரு பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மாதிரி முகாமையும் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

அதன்பிறகு அவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது இதுவரை முதல்கட்ட சிறப்பு முகாமில் பங்கேற்க இருக்கும் ரேஷன்கார்டுதாரர்களில் எத்தனை பேருக்கு மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டுள்ளது? மீதமுள்ளவர்களுக்கு விரைவாக வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து கேட்டறிந்தார். முகாம் நடைபெறும்போது முகாமுக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது? என்ற விவரத்தையும் கேட்டறிந்த ஜோதிநிர்மலாசாமி யாரும் விடுபடாத வகையில் விண்ணப்ப படிவங்கைள வழங்கவும், முகாமுக்கு வரும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்யவும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின்போது மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி அனில்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story