மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவலர்கள் பாடி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
தர்மபுரி
தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 25 காவல் நிலையங்கள், 4 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள், 4 சாலை ரோந்து வாகனங்கள், 3 போக்குவரத்து காவல் நிலையங்கள் என மொத்தம் 36 பாடி கேமராக்களை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.
அப்போது போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், சாலை விபத்துக்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவலர்கள் பாடி கேமராவை பொருத்திக்கொண்டு கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். இதைத் தொடர்ந்து பாடி கேமராவினை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து தொழில்நுட்ப பிரிவு இன்ஸ்பெக்டர் பால்ராஜ் செய்முறை விளக்கம் அளித்தார்.