கடைக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிய குரங்குகள்
கூடலூரில் குரங்குகள் கடைக்குள் புகுந்து பொருட்களை சூறையாடின. எனவே, கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கூடலூர்
கூடலூரில் குரங்குகள் கடைக்குள் புகுந்து பொருட்களை சூறையாடின. எனவே, கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குரங்குகள்
நீலகிரி மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி உள்ளதால் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதியில் சிறுத்தைகள், புலிகள், கரடிகள் அடிக்கடி ஊருக்குள் வருகின்றன. கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் தினமும் ஊருக்குள் வந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
தற்போது கரடிகளும் கூடலூருக்குள் வரத் தொடங்கி உள்ளன. இதனால் மக்கள் அச்சத்துடன் நடந்து செல்லும் நிலை உள்ளது. இந்தநிலையில் கூடலூர் நகருக்குள் குரங்குகள் கூட்டமாக உலா வர தொடங்கி உள்ளன. அவை வீடுகள் மற்றும் கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்குள் புகுந்து உணவு மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ள பொருட்களை சூறையாடி வருகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
மின்விளக்குகளை உடைத்தது
இந்தநிலையில் நேற்று கூடலூர்-கோழிக்கோடு செல்லும் சாலையில் நாடார் சங்க திருமண மண்டபம் பகுதியில் குரங்குகள் கூட்டம் வந்தது. பின்னர் அங்கு பால் விற்பனை கடையின் உள்ளே திடீரென ஒரு குரங்கு நுழைந்தது. தொடர்ந்து கடையில் இருந்தவர்களை ஆக்ரோஷமாக தாக்க முயன்றனது. இதனால் கடைக்காரர் பயந்து கடையை விட்டு வெளியேறினார். குரங்கு நீண்ட நேரம் கடைக்குள் இருந்தவாறு, அங்கிருந்த மின்விளக்குகளை உடைத்து சேதப்படுத்தியது. மேலும் மின் விளக்குகளை பிடித்து தொங்கியவாறு அங்கும், இங்குமாக ஊஞ்சல் போல் ஆடிக்கொண்டிருந்தது. பின்னர் வியாபாரிகள் குரங்குகளை விரட்டினர்.
இதேபோல் வீடுகளுக்குள் குரங்குகள் கூட்டமாக புகுந்து உணவு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்கிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே, ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.