பழனி முருகன் கோவிலில் கூண்டு வைத்து குரங்குகள் பிடிப்பு


பழனி முருகன் கோவிலில் கூண்டு வைத்து குரங்குகள் பிடிப்பு
x
தினத்தந்தி 28 Aug 2023 1:00 AM IST (Updated: 28 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் சுற்றி திரிந்த குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது.

திண்டுக்கல்

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் மலை மீது அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் பாம்பு, குரங்கு, மயில் என பல்வேறு உயிரினங்கள் உள்ளன. இதில் மலைக்கோவில் பிரகாரங்கள், படிப்பாதை ஆகிய இடங்களில் ஏராளமான குரங்குகள் குட்டிகளுடன் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகளுக்கு கோவிலுக்கு வரும் பக்தர்கள் பழம், பிஸ்கெட் உள்ளிட்ட உணவு பொருட்களை கொடுக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பழனி கோவில் பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளால் பக்தர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக வனத்துறையினருக்கு புகார் வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 'செல்பி' எடுத்த பக்தரின் செல்போனை குரங்கு ஒன்று பறித்து சென்ற சம்பவம் அரங்கேறியது. எனவே கோவில் பகுதியில் திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதைத்தொடர்ந்து வனத்துறை சார்பில் பழனி முருகன் கோவில் பகுதியில் கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவில் வெளிப்பிரகாரத்தில் 2 இடங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். இந்த கூண்டில் 7 குரங்குகள் சிக்கின. பிடிபட்ட இந்த குரங்குகளை பழனி வனத்துறையினர் பத்திரமாக கொடைக்கானல் சாலையில் உள்ள சவரிக்காடு வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.


Related Tags :
Next Story