மாம்பழத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்து கடமான் வேட்டை ; 3 பேர் கைது


மாம்பழத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்து கடமான் வேட்டை ; 3 பேர் கைது
x

களக்காடு அருகே மாம்பழத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்து கடமான் வேட்டையாடியதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கொழுந்துமாமலை பீட் பகுதியில் களக்காடு வனசரகர் பிரபாகரன் தலைமையில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது வனத்துறையினரை பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்த மூவர் தப்பி ஓடினர். இதைக்கண்ட வனத்துறையினர் மூவரையும் விரட்டி பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர்கள் கங்கணாங்குளம் காமராஜ் நகரை சேர்ந்த முருகேசன் மகன் சிவசங்கர் (30), பெருமாள் மகன் கனகராஜ் (21), அந்தோணிநகரை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், இவர்கள் மூவரும் மாம்பழத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்து கடமானை வேட்டையாடி, எலும்பு துண்டுகளைபோட்டு விட்டு, கறியை வெட்டி எடுத்து சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்து, சேரன்மாதேவி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் சிவசங்கர், கனகராஜ் ஆகியோரை பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலும் அடைத்தனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை வனத்துறை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.


Next Story