சென்னையில் 2-வது நாளாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு


சென்னையில் 2-வது நாளாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
x

சென்னையில் 2-வது நாளாக நேற்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

சென்னை,

நாடு முழுவதும் கடந்த 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டன. அதன்படி தமிழகத்திலும், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டன. இவ்வாறு பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி, விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க நேற்றும், நேற்று முன்தினமும் போலீசார் அனுமதி வழங்கினர்.

சென்னையில் நேற்று 2-வது நாளாக விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர், நீலாங்கரை அருகே உள்ள பாலவாக்கம் பல்கலை நகர் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கிரேன் வசதி, மணல் பரப்பில் விநாயகர் சிலைகளை சிரமம் இன்றி கொண்டு செல்வதற்கான தண்டவாள அமைப்புகளும் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், தீயணைப்பு போலீஸ் மீட்பு குழுவினர், கடலோர காவல் படையினர் மற்றும் சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து போலீசார் ஒருங்கிணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

அதன்படி, சிலை கரைக்கப்பட்ட இடங்களில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சுகள், ரப்பர் படகுகள் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும், சிலைகளை கரைப்பதற்கு தன்னார்வலர் குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தன.

பட்டினப்பாக்கத்தில் 1,200 விநாயகர் சிலைகள்

சென்னை மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, அடையாறு, தியாகராய நகர், பரங்கிமலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, கோயம்பேடு, அண்ணா நகர், கொளத்தூர், ஆவடி மாநகராட்சி மற்றும் தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிலைகள் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் கொண்டு வந்து கரைக்கப்பட்டன.

இதில் ஊஞ்சல் விநாயகர், சிவசக்தி விநாயகர், சிவ ருத்ர தாண்டவ விநாயகர், சித்தி-புத்தி விநாயகர், திருப்பதி வெங்கடாஜலபதி விநாயகர், ஐயப்ப விநாயகர், புல்லாங்குழல் விநாயகர், உலகக்கோப்பை விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வகையான அலங்காரங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கொண்டு வந்து கரைக்கப்பட்டன. சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் 1200 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

பாலவாக்கத்தில் 583 சிலைகள்

விநாயகர் சிலைகளை மாட்டு வண்டி, டிராக்டர், ஆட்டோக்கள், டெம்போக்கள், லாரிகளில் வைத்து மேள தாளம் முழங்க உற்சாகமாக பக்தி கோஷமிட்டபடி கடற்கரைக்கு கொண்டு வந்தனர். இதே போன்று சென்னை நீலாங்கரை அருகே உள்ள பாலவாக்கம் பல்கலை நகர் கடற்கரை பகுதியில், மாங்காடு, போரூர், குன்றத்தூர், குரோம்பேட்டை, சோமங் கலம், தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 583 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

இதே போன்று சென்னை காசிமேடு கடற்கரையில் அந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 180 விநாயகர் சிலைகளும், எண்ணூர் கடற்கரையில் அந்த சுற்று வட்டாரத்தை சேர்ந்த 70 சிலைகளும், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பகுதியில் அந்த பகுதியை சேர்ந்த 8 சிலைகளும் கடலில் கரைக்கப்பட்டன.


Next Story