ஈரோட்டில் தாய் தற்கொலை முயற்சி விஷம் கலந்த பழச்சாறு குடித்த சிறுவன் சாவு- மற்றொரு மகனுக்கு தீவிர சிகிச்சை
ஈரோட்டில் தற்கொலைக்கு முயன்ற தாய் மீதம் வைத்த விஷம் கலந்த பழச்சாறை குடித்த 9 வயது சிறுவன் உயிரிழந்தான். மற்றொரு மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஈரோட்டில் தற்கொலைக்கு முயன்ற தாய் மீதம் வைத்த விஷம் கலந்த பழச்சாறை குடித்த 9 வயது சிறுவன் உயிரிழந்தான். மற்றொரு மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பொறியலுக்காக தகராறு
ஈரோடு அருகே ரகுபதி நாயக்கன்பாளையம் வாய்க்கால்மேடு ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் சக்திவேல். கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி காவிரி. இவர்களது மகன்கள் விஷ்ணு (9), விஸ்வா (7). இவர்கள் காவிரியின் தந்தை சுப்பிரமணியின் வீட்டில் வசித்து வருகின்றனர். விஷ்ணு பிறந்ததில் இருந்தே பேச முடியாமலும், நடக்க முடியாமலும் இருந்து வந்தான். விஸ்வா 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.
கடந்த 30-ந் தேதி இரவு சக்திவேல் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது சாப்பாட்டுக்கு பொறியல் இல்லையென்று காவிரியிடம் சக்திவேல் தகராறில் ஈடுபட்டார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் காவிரி கோபித்து கொண்டு தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் சக்திவேல் வேலைக்கு சென்ற பிறகு காவிரி மீண்டும் வீட்டுக்கு திரும்பினார்.
விஷம் கலந்த பழச்சாறு
இந்தநிலையில் காவிரி திடீரென வீட்டுக்கு வெளியில் நின்று வாந்தி எடுத்தார். அப்போது அங்கு வந்த காவிரியின் சகோதரன் மணிகண்டன், உடலுக்கு என்ன பிரச்சினை? என்று கேட்டு உள்ளார். அதற்கு காவிரி, 3 பாட்டிலில் மாம்பழச்சாறு வாங்கி வந்து விஷத்தை கலந்ததாகவும், அதில் ஒரு பாட்டில் பழச்சாறு குடித்துவிட்டதாகவும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் உடனடியாக வீட்டுக்குள் சென்று பார்த்தார்.
அப்போது மீதமுள்ள 2 பாட்டில்களில் இருந்த பழச்சாைற விஷ்ணுவும், விஸ்வாவும் குடித்து கொண்டு இருந்ததை பார்த்த மணிகண்டன், விரைந்து சென்று பாட்டில்களை பிடிங்கி வெளியில் வீசினார். இதைத்தொடர்ந்து காவிரி மற்றும் 2 சிறுவர்களையும் மணிகண்டன் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
சிறுவன் சாவு
அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு 3 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் விஷ்ணு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தான். காவிரிக்கும், விஸ்வாவுக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.