குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை


தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி அருகே, குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தென்காசி

கடையநல்லூர்:

தென்காசி அருகே, குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

குடும்ப தகராறு

தென்காசி அருகே உள்ள இலத்தூர் சுண்டங்காட்டு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருடைய மகன் ராமகிருஷ்ணன் (வயது 35). இவர் சுமை தூக்கும் கூலித் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார்.

இவருக்கு மகேஸ்வரி (28) என்ற மனைவியும், சுஜிதா (7), கீர்த்தனா (4) ஆகிய 2 பெண் குழந்தைகளும் இருந்தனர்.

ராமகிருஷ்ணன் - மகேஸ்வரி குடும்பத்தில் பணப்பிரச்சினை, குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

தீக்குளிப்பு

நேற்று காலை ராமகிருஷ்ணன் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்தார். அப்போது கதவை மூடிக்கொண்டு மகேஸ்வரி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

அப்போது அருகில் இருந்த 2 குழந்தைகளையும் சேர்த்து கட்டிப் பிடித்துள்ளார். இதனால் தீக்காயம் அடைந்த குழந்தைகள் வலிதாங்க முடியாமல் அலறினார்கள்.

தாய், குழந்தை சாவு

குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது மகேஸ்வரியும், குழந்தை சுஜிதாவும் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர்.

மற்றொரு குழந்தை கீர்த்தனா லேசான காயங்களுடன் அழுதபடி வெளியே வந்தாள். இதை பார்த்ததும் அங்கு நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சிகிச்சை

பின்னர் தீக்காயத்துடன் இருந்த கீர்த்தனாவை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த பரிதாப சம்பவம் குறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்தசம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story