ஆலந்தூர் ஆசர்கானா பகுதியில் பஸ் சக்கரத்தில் சிக்கி தாய் பலி - மகன் கண்முன்னே பரிதாபம்


ஆலந்தூர் ஆசர்கானா பகுதியில் பஸ் சக்கரத்தில் சிக்கி தாய் பலி - மகன் கண்முன்னே பரிதாபம்
x

ஆலந்தூர் ஆசர்கானா பகுதியில் பஸ் சக்கரத்தில் சிக்கி மகன் கண் முன்னே தாய் பரிதாபமாக இறந்தார்.

சென்னை

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெயா (வயது 42). இவர் உடல் நலக்குறைவு காரணமாக கே.கே.நகரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தனது மகன் பார்த்திபன் (25) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஆலந்தூர் ஆசர்கானா அருகே வளைவு பகுதியில் திரும்பும்போது கோவையில் இருந்து வந்த அரசு விரைவு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறிய பார்த்திபன், அவரது தாய் ஜெயா இருவரும் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது ஜெயா மீது மாநகர பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. பஸ் சக்கரத்தில் சிக்கிய ஜெயா, மகன் பார்த்திபன் கண்முன்னேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் விபத்தை ஏற்படுத்திய பஸ் மீது கற்களை வீசினர். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னையை அடுத்த வண்டலூரில் இருந்து பாரிமுனைக்கு மாநகர சொகுசு பஸ் ஒன்று வந்தது. அதேபோல் கண்டிகை அருகே மேலகோட்டையூர் பகுதியை சேர்ந்த டேனியல் (42) என்பவர் தனது குடும்பத்துடன் காரில் சென்னை நோக்கி வந்தார்.

ஆலந்தூர் ஆசர்கானா பகுதி அருகே வந்தபோது கார் மீது சொகுசு பஸ் லேசாக உரசியதாக கூறப்படுகிறது. இதனால் டேனியல், காரை வேகமாக இயக்கி பஸ்சை முந்திச்செல்ல முயன்றபோது காரின் டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், மாநகர சொகுசு பஸ் முன்னால் சென்று தடுப்பு சுவரில் மோதி சாலையின் குறுக்கே நின்றது.

இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்துவந்த பரங்கிமலை போக்குவரத்து போலீசார், விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.


Next Story