அன்னை சித்தரின் மணிமண்டப கும்பாபிஷேக விழா


அன்னை சித்தரின் மணிமண்டப கும்பாபிஷேக விழா
x

அன்னை சித்தரின் மணிமண்டப கும்பாபிஷேக விழா நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூரை அடுத்த எளம்பலூரில் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் உள்ள நளினாம்பிகை சமேத காகன்னை ஈஸ்வரர் கோவில் வளாகத்தில் அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமியின் அதிஷ்டானம் உள்ளது. இதில் மணிமண்டபம் 12 ஜோதிலிங்கம் மற்றும் 21 சித்தர்கள் சிலைகளுடன் அமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. மாலையில் அன்னை சித்தரின் 3-வது ஆண்டு குருபூஜை விழா நடந்தது.

இதனை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக ரோகிணி மாதாஜி முன்னிலையில் ஸ்ரீரங்கம் வேதாகம பாடசாலை தெய்வசிகாமணி குருக்கள் தலைமையில் சிவாச்சாரியர் குழுவினர் 4 கால யாகசாலை பூஜையை நடத்தினர். நேற்று காலை 4-வது கால யாகசாலை பூஜைகளுடன் மகாதீபாராதனை நடந்தது. அப்போது பன்னிருதிருமுறைகள், திருப்புகழ், அபிராமி அந்தாதிகள் இசைக்கப்பட்டன. அதன்பிறகு கடங்கள் புறப்பாடு நடந்தது. சுந்தரமகாலிங்கம் சுவாமி, தவசிநாதன் சுவாமி மற்றும் தொழிலதிபர் திட்டக்குடி ராஜன் ஆகியோர் புனிதநீர்குடங்களை தலையில் சுமந்து மணிமண்டப கோபுரத்தை அடைந்தனர். அங்கு சூரியனார் கோவில் ஆதீனம் 28-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பராமாச்சாரியார் சுவாமி தலைமையில் மணிமண்டப கோபுரகலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது பக்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

விழாவில் 400-க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு வஸ்திர தானங்கள் வழங்கப்பட்டது. அன்னதானம் நடந்தது. மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு இலவச சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. விழாவில் தமிழ்நாடு மக்கள் நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம், ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி, போலீஸ் ஐ.ஜி. துரைகுமார், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், சூரியனார்கோவில் ஆதினம் கார்யம் ஸ்ரீமத் வாமதேவ சிவாக்கர தேசிக சுவாமிகள், சிங்கப்பூர் வக்கீல் ரத்தினவேல், நடராஜா ஆனந்தபாபா, பொன்.மணிவண்ணன் பாபாஜி, சன்மார்க்க சுவாமி பத்மேந்திரா, சிவசேனா கட்சியின் மாநில பொறுப்பாளர் சசிகுமார், இலங்கை ராதா மாதாஜி, முன்னாள் ஊராட்சி தலைவர் ராமசாமி, மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜாசிதம்பரம் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, அமெரிக்கா மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து அன்னைசித்தரின் மெய்யன்பர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story