27 பவுன் நகைகளை திருடிய தாய், மகன் கைது
கூடலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 27 பவுன் நகைகளை திருடிய கேரளாவை சேர்ந்த தாய், மகனை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
கூடலூர்,
கூடலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 27 பவுன் நகைகளை திருடிய கேரளாவை சேர்ந்த தாய், மகனை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
27 பவுன் நகைகள் திருட்டு
நீலகிரி மாவட்டம் கூடலூர் மங்குலி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் குட்டி. இவருக்கு கடந்த வாரம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதனால் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது மனைவி சாவித்திரி வீட்டை பூட்டி விட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கணவரை கவனித்து வந்தார்.
கடந்த 7-ந் தேதி கிருஷ்ணன் குட்டி வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 27 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு திருடர்களை தேடி வந்தனர்.
தாய், மகன் கைது
திருட்டு நடந்த நாளில் நகரில் உள்ள கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. தனிப்படை போலீசார் கர்நாடகா, கேரளாவில் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் கூடலூர் புதிய பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த பெண் மற்றும் வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கிருஷ்ணன் குட்டி வீட்டில் நகைகளை திருடியது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி பாண்டிகடவு பகுதியை சேர்ந்த லதா (வயது 35), அவரது மகன் மனு (20) என்பது தெரியவந்தது.
பின்னர் லதா, மனு ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 27 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். இதேபோல் திருட்டில் தொடர்புடையை மற்றொருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.