வீட்டின் சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
விக்கிரவாண்டி அருகே வீட்டின் சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி தாலுகா ஏழுசெம்பொன் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன்(வயது 23). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு அதே ஊரைச்சேர்ந்த தனது நண்பர் விஜய்(23) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கஞ்சனுார் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். சவுந்தர்ராஜன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். விஜய் பின்னால் உட்கார்ந்திருந்தார். ஏழு செம்பொன்கிராமத்தில் தனது வீட்டின் அருகே வந்தபோது திடீரென கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் உள்ள வீட்டின் சுவற்றில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சவுந்தர்ராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த விஜய்யை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த விபத்து பற்றி கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.