மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; விவசாயி பலி


மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; விவசாயி பலி
x

ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் விவசாயி பலியானார். சிறுமி உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

புதுக்கோட்டை

உறவினர் வீட்டிற்கு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே முள்ளங்குறிச்சி ஊராட்சி கடுக்கக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (வயது 45). இவரது மகள் லிஸியா (6). ஜெபஸ்தியார் மனைவி சவரியம்மாள் (67). இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் குளவாய்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் பாச்சிக்கோட்டை வழியாக ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். கறம்பக்குடி அருகே மோலுடையான்பட்டியை சேர்ந்த விவசாயி பிச்சையா (52), அதே கிராமத்தை சேர்ந்த சின்னையா (50) ஆகிய இருவரும் ஆலங்குடியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் பாச்சிக்கோட்டை வழியாக ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

பாச்சிக்கோட்டை-மழையூர் சாலையில் வந்தபோது, 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் 4 பேர் படுகாயமடைந்தனர். சின்னையா மட்டும் காயமின்றி உயிர்தப்பினார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மேல்சிகிச்சைக்காக ஆரோக்கியதாஸ் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், பிச்சையா புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

விவசாயி பலி

இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிச்சையா சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பிச்சையா மனைவி சின்னப்பொண்ணு கொடுத்த புகாரின் பேரில், ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story