கந்தலான தேசிய நெடுஞ்சாலையால் கதறும் வாகன ஓட்டிகள்
கந்தலான தேசிய நெடுஞ்சாலையால் வாகன ஓட்டிகள் கதறுகின்றனர்.
ஒரு நாட்டில் சாலை உள்கட்டமைப்பு வசதி சிறப்பாக இருந்தால் தான், அங்கு தொழில் வளம் பெருகும். அதனால் எந்த ஒரு சாலையும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஆனால், இன்று எத்தனை சாலை முறையாக பராமரிக்கப்பட்டு, வருகிறது என்பது தான் கேள்வியே. அதற்கு ஒரு உதாரணம் தான் சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையாகும்.
4 வழிச்சாலை பணி
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து திருச்சி வரை செல்லும் சுமார் 150 கி.மீ. தூரம் கொண்ட சாலை மாநில நெடுஞ்சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்டது. இந்த சாலை கடலூர், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த நிலையில், சிதம்பரம்- திருச்சி் இடையே ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதில், திருச்சி-கல்லகம், கல்லகம்-மீன்சுருட்டி, மீன்சுருட்டி-சிதம்பரம் என 3 பகுதிகளாக சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கந்தலாகி கிடக்கும் சாலை
இந்த பணிகள் ஒருபுறம் நடந்து வந்த போதிலும், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமானதாக இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை என்பதற்கான எந்தஒரு அறிகுறியும் இலலாமல் ஏதோ கிராமப்புறங்களில் உள்ள சாலையாகவே காட்சி அளிக்கிறது.
பல இடங்களில் பள்ளம் மேடுகளாகவும், சில இடங்களில் சாலைகளே இல்லாமல் ஜல்லிக்கற்கள் பெயர்ந்தும் கந்தலாகி கிடக்கிறது. இதனால் இந்த வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் கதறும் நிலை ஏற்பட்டுள்ளது.
விபத்துக்களுக்கு வழிவகுக்கிறது
குறிப்பாக காட்டுமன்னார் கோவில் அருகே வீராணந்தபுரம், கண்டமங்கலம், குருங்குடி, வீராணநல்லூர், காட்டுமன்னார்கோவில், ரம்ஜான் தைக்கால் லால்பேட்டை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த சாலை, எங்கு இருக்கிறது என்று தேடவேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.
சில இடங்களில் பள்ளங்கள் உருவாகி, அங்கு மணல் மூட்டைகளில் சிவப்பு நிற கொடி நாட்டப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது பகல் நேரங்களில் பாதுகாப்பானதாக இருந்தாலும், இரவில் விபத்துக்கு வழிவகுப்பதாகவே அமைகிறது. இதுபோன்ற காரணங்களால், இந்த சாலையில் விபத்துகள் தொடர்கதையாக நீண்டு வருகிறது. அதிலும், அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் இந்த சாலையை கடந்து செல்ல வேண்டும் என்றால் பெரும் சவாலாகவே இருக்கிறது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் அலுவலக பணிக்கு செல்பவர்களும் குறித்த நேரத்தில் சென்று சேரமுடியவில்லை. சாலை மோசமான நிலைக்கு சென்ற போதிலும், தற்போது அந்த பகுதியில் நடக்கும் நான்கு வழிச்சாலை பணிக்கான கனரக வாகனங்கள் அனைத்தும் இதன் வழியாகவே பயணிக்கின்றன. இதனால், பாதிப்புகள் என்பது மேலும் அதிகரிப்பதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
தரம் மட்டுமே உயர்த்தினர்
இதுகுறித்து லால்பேட்டையை சேர்ந்த ஒருவர் கூறுகையில், சிதம்பரம்-திருச்சி சாலை மாநில நெடுஞ்சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையாக 10 ஆண்டுகளுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்டது. தரம் மட்டுமே உயர்த்தினார்கள், ஆனால் சாலையின் தரத்தை உயர்த்தாமல் அதிகாரிகள் தவிர்த்து வந்தனர். தற்போது 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த சாலையானது, வயல்வெளி பகுதி வழியாக அமைத்து செல்கிறார்கள்.
4 வழிச்சாலை பணிக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் தற்போது சேதமடைந்து கிடக்கும் தேசிய நெடுஞ்சாலையின் வழியாக தான் கனரக வாகனங்களில் எடுத்து செல்கிறார்கள். ஆனால், இதை தற்காலிகமாக சீரமைக்க வேண்டும் என்கிற முயற்சியை மட்டும் அதிகாரிகள் கையில் எடுக்க தயங்குகிறார்கள்.
பழையதை மறக்க வேண்டாம்
புதிதாக அமைக்கப்படும் 4 வழிச்சாலை பணிகள் முழுமை பெறும் வரையில், தற்போது கிராமத்துக்குள் செல்லும் இந்த சாலையை தான் பயன்படுத்தியாக வேண்டும்.
அவ்வாறு இருக்கும் போது, அதிகாரிகள் இந்த சாலையின் மீது கொஞ்சம் கவனத்தை செலுத்தினால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இல்லாத ஒரு பயணம் அமையும். விபத்துக்களையும் கொஞ்சம் தவிர்க்க முடியும் என்றார்.
புதிய சாலையின் வருகையால், பழைய சாலையை மறந்துவிடக்கூடாது. இதையும் வாகன போக்குவரத்துக்கு ஏற்றாற்போல் சீரமைத்து விபத்தில்லா பயணத்துக்கு வழிவகுக்க வேண்டும் என்பதே அந்த பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே அதிகாரிகள் இவர்களது கோரிக்கைக்கு செவி வாய்ப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.