ஊத்துக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் வாகன ஓட்டிகள் - மேம்பாலம் அமைக்க கோரிக்கை


ஊத்துக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் வாகன ஓட்டிகள் - மேம்பாலம் அமைக்க கோரிக்கை
x

ஊத்துக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மேம்பாலம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 30 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு ஏராளமான காய்கறி, மளிகை, துணி, சிமெண்டு, மருந்து கடைகள் உள்ளன.

இதனால் நூற்றுக்கணக்கான லாரிகள் ஊத்துக்கோட்டைக்கு வந்து செல்கின்றன. மேலும் ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசு அனுமதி வழங்கிய சவுடுமணல் குவாரிகள் இயங்குகின்றன. எனவே மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் இருந்து ஏராளமான லாரிகள் சவுடுமண்ணுடன் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கிறது.

ஊத்துக்கோட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் வாகன நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர். அதேபோல் ஊத்துக்கோட்டையில் இருந்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் மற்றும் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு நோயாளிகளை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்வதால் நோயாளிகள் சிலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கிறது.

எனவே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி ஊத்துக்கோட்டையில் வெளிப்புறசாலை மற்றும் அம்பேத்கர் நகரில் இருந்து அண்ணாநகர் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story