சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
அருப்புக்கோட்டையில் சாலையில் தேங்கிய மழைநீரினால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டையில் சாலையில் தேங்கிய மழைநீரினால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
கன மழை
அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் கடும் வெயில் காரணமாக மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்தநிலையில் அருப்புக்கோட்டையில் நேற்று காலை முதலே வெயில் சுட்டெரித்து வந்தது. இதையடுத்து பிற்பகல் வேளையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன.
பின்னர் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. அதனைத்தொடர்ந்து புளியம்பட்டி, வேலாயுதபுரம், விருதுநகர் ரோடு, மதுரை ரோடு, பஜார் உள்ளிட்ட நகர் பகுதிகளில் மிதமான காற்றுடன் கனமழை பெய்தது.
வாகன ஓட்டிகள் சிரமம்
திடீர் கனமழையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர். ½ மணி நேரம் நீடித்த கனமழை காரணமாக வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் கடும் வெயிலில் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் கன மழை காரணமாக பல இடங்களில் கழிவு நீரோடு கலந்து மழைநீர் சாலைகளில் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறிய மழை பெய்தால் கூட சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அத்துடன் கழிவுநீருடன், மழைநீரும் சேர்ந்து வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்றுேநாய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் மழைநீர் தேங்காத வண்ணம் வடிகால்கள் அனைத்தையும் தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.