வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் எம்.பி. ஆய்வு
வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் கரூர் எம்.பி. ஜோதிமணி திடீர் ஆய்வு செய்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில், மேற்கொள்ளப்படுகிற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கரூர் எம்.பி. ஜோதிமணி திடீர் ஆய்வு செய்தார். காசிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களை அவர் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து காசிபாளையம் எத்திலாம்பட்டி வண்ணாம்பாறை, வேடசந்தூர் வண்ணாரப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள சலவைக்கூடங்களை அவர் ஆய்வு செய்தார். வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர், தனது தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் வழங்கிய வென்டிலேட்டர் கருவியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மருத்துவமனையில் நிலவும் டாக்டர்கள் பற்றாக்குறை குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதைத்தொடர்ந்து ரூ.16 கோடியே 60 லட்சத்தில் நடைபெறும் மேம்பால பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வடமதுரை, வேடசந்தூர் பிரிவில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வரும் நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் அமைக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலிறுயுத்தி வருவதாக அப்பகுதி மக்களிடம் எம்.பி. தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது வேடசந்தூர் வட்டார காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், வட்டார துணைத்தலைவர்கள் ஜாபர்அலி, தாமஸ், வட்டார பொதுச்செயலாளர் பகவான், முன்னாள் மாவட்ட பொதுசெயலாளர் பாண்டியன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கண்ணன், திருநாவுக்கரசு, கல்வார்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் சுப்புராயன், வேடசந்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பஷீர் அகமது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.