எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
நிலக்கரி மூலம் எந்திரங்களை இயக்கினால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக கூறி எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டயர் தொழிற்சாலை
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் ஊராட்சியில் எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. தற்போது நிலக்கரி மூலம் எந்திரங்களை இயக்குவதற்கு எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலையில் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 5 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றால் நிலக்கரி மூலம் முழு வீச்சில் எந்திரங்களை இயக்க டயர் தொழிற்சாலை நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நிலக்கரி மூலம் எந்திரங்களை இயக்கினால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக கூறி தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் காரை சுப்ரமணியன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊர்வலமாக சென்று எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
ரசாயன கழிவுகள்
எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகளால் நாரணமங்கலம், மருதடி, விஜயகோபாலபுரம், காரை, மலையப்ப நகர், ராமலிங்கம் நகர், அயிலூர், சிறுவாச்சூர், ஆலத்தூர், வரகுபாடி, குடிக்காடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு மூச்சுத்திணறல், ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, நுரையீரல் மற்றும் சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. மேலும், நிலத்தடி நீரில் ரசாயனம் கலந்து, விவசாயம் அழிந்து வருகிறது. மேலும் கால்நடைகளும் பாதிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்த டயர் தொழிற்சாலையின் பின்புறம் மிக அருகாமையில் மலையப்ப நகரில் குடியிருந்து வரும் 150 நரிக்குறவர்கள் குடும்பங்கள் மற்றும் ராமலிங்கம் நகரில் 40 கலைக்கூத்தாடி குடும்பங்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கருத்து கேட்பு கூட்டங்கள்
இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட கலெக்டரிடம் பல முறை புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2-ந் தேதி ஆலத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் அரியலூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் செந்தில்குமார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை நிர்வாகம் பொதுமக்களுக்கு வருகிற 18-ந் தேதி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்தநிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு மதிப்பளிக்காமல் எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. எனவே நிலக்கரி மூலம் எந்திரங்களை இயக்குவதை உடனடியாக தடுத்து நிறுத்தி, இந்த பகுதியில் வசிக்கும் லட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் நரிக்குறவர்கள் மற்றும் கால்நடைகளின் உயிரை காப்பாற்ற வேண்டும். மேலும் நிலக்கரி பயன்பாடு குறித்து இந்த பகுதி மக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.