விராலிமலை முருகன் கோவிலில் பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்ச்சி
விராலிமலை முருகன் கோவிலில் பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன், வள்ளி-தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாத மூலம் நட்சத்திரத்தில் பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி ஆவணி மாத மூல நட்சத்திரத்தையொட்டி மலைமேல் உள்ள சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து மலைமேல் உள்ள வில்வமரத்தடியில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிவன்- பார்வதி சிறப்பு அலங்காரத்துடன் மலையடிவாரத்திற்கு வந்து மலையைச் சுற்றி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ெசய்தனர்.