தொடர் மழையால் நெல்லையில் சேறும், சகதியுமாக மாறிய சாலைகள்- வாகன ஓட்டிகள் அவதி


தொடர் மழையால்  நெல்லையில் சேறும், சகதியுமாக மாறிய சாலைகள்-  வாகன ஓட்டிகள் அவதி
x

நெல்லையில் தொடர் மழையால் பல்வேறு ரோடுகள் சேறும், சகதியுமாக மாறி உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் அவதிப்படுகிறார்கள்

திருநெல்வேலி

நெல்லையில் தொடர் மழையால் பல்வேறு ரோடுகள் சேறும், சகதியுமாக மாறி உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் அவதிப்படுகிறார்கள்.

தண்ணீர் தேங்கியது

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

நெல்லை மாநகரில் பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. மாநகரில் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்துக்காக சாலைகளில் குழி தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. அந்த பகுதியில் ரோடு அமைக்கப்படாமல் உள்ளதால் தண்ணீர் தேங்கியது. அதன் மீது வாகனங்கள் சென்றதால் வயலில் உழவு செய்தது போல் சாலைகள் சேறும், சகதியுமாக மாறிவிட்டது.

சேறும், சகதியுமான சாலை

நெல்லை ஸ்ரீபுரம் முதல் டவுன் ஆர்ச் வரையிலும், சந்திபிள்ளையார் கோவில் அருகில் இருந்து காட்சி மண்டபம் வரையிலும், பேட்டை ரோடும் சேறும், சகதியுமாகி விட்டது.

சந்திப்பு மதுரை ரோடு, சிந்துபூந்துறை சாலைத்தெரு பகுதியில் சமீபத்தில் குழாய்கள் பதிக்கப்பட்டதால் மெகா பள்ளம் உருவாகி கிடக்கிறது. அங்கும் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. நெல்லை வடக்கு பைபாஸ் சாலை அருகே உள்ள சிவந்தி நகர், தெற்கு பாலபாக்ய நகர், டவுன் பகுதி உள்பட மாநகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இதே நிலை காணப்படுகிறது.

பொதுமக்கள் அவதி

சந்திப்பு மதுரை ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தட்டு தடுமாறி செல்கின்றன. நடந்து செல்லும் பொது மக்களும் கடும் அவதிப்படுகிறார்கள். இதுதவிர சிந்துபூந்துறை சாலைத்தெரு சந்திப்பில் பாதாள சாக்கடை மூடி உடைந்து, அதன் வழியாக கழிவுநீர் வெளியேறுகிறது. இந்த கழிவு நீரும், மழை தண்ணீரும் கலந்து ரோட்டில் தேங்கி கிடக்கிறது. அதன் வழியாக பொதுமக்கள் சிரமப்பட்டு செல்கிறார்கள்.

எனவே மோசமான நிலையில் உள்ள சாலைகளை தற்காலிகமாக ஜல்லிக்கற்களை கொண்டு சீரமைக்க வேண்டும். மழை முடிந்த உடன் அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story