தமிழக நிதியமைச்சர் கார்மீது செருப்பு வீச்சு - முத்தரசன் கண்டனம்


தமிழக நிதியமைச்சர் கார்மீது செருப்பு வீச்சு - முத்தரசன் கண்டனம்
x

தமிழக நிதியமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன் கார்மீது செருப்பு வீசியதற்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அண்மையில் காஷ்மீர் பகுதியில், பயங்கரவாதிகள் ராணுவ முகாம் மீது நடத்திய தாக்குதலில் மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் கொல்லப்பட்டார். மரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் இன்று (13.08.2022) மதுரைக்கு விமானம் மூலம் எடுத்து வரப்பட்டது.

மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்த அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் சென்றுள்ளனர். விமான நிலையம் சென்று ராணுவ வீரர் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி திரும்பிய நேரத்தில் நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனை தாக்கும் நோக்கத்துடன் பாஜக, சங்பரிவார் கும்பல் செருப்புகளை வீசி கலகம் ஏற்படுத்தி, பெரும் வன்முறை உருவாக்க எத்தனித்துள்ளது. அமைச்சரின் சமயோகித செயலும் போலீசாரின் விரைந்த நடவடிக்கையும் மோசமான விபரீதம் நிகழாமல் தடுத்துள்ளது.

பாஜக, சங்பரிவார் கும்பலின் இழிசெயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக அமைதி நிலையை சீர்குலைத்து, கலவரத்தை ஏற்படுத்தி, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அராஜக செயலில் ஈடுபடும் கும்பலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

1 More update

Next Story