முல்லை பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை


முல்லை பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை
x

கீரமங்கலம் பூ கமிஷன் கடையில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு முல்லை பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.

புதுக்கோட்டை

பூ உற்பத்தி

மதுரை, திருச்சி மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலத்தை சுற்றியுள்ள செரியலூர், நகரம், சேந்தன்குடி, கொத்தமங்கலம், குளமங்கலம், பனங்குளம், பாண்டிக்குடி, பெரியாளூர், நெய்வத்தளி, மேற்பனைக்காடு, கரம்பக்காடு, அணவயல், மாங்காடு, வடகாடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலும் மேலும் வம்பன், மாஞ்சான்விடுதி, மழையூர், சம்மட்டிவிடுதி உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலர்கள் உற்பத்தி செய்யப்பட்டு கீரமங்கலம், கொத்தமங்கலம் பூ கமிஷன் கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு வெளியூர் வியாபாரிகளும் வந்து வாங்கிச் செல்கின்றனர்.

முல்லை பூ கிலோ ரூ.2 ஆயிரம்

கீரமங்கலம் மலர் கமிஷன் கடைகளுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 5 முதல் 10 டன் வரை பூக்கள் விற்பனைக்கு வரும் நிலையில் பண்டிகை, திருவிழா, சுபமுகூர்த்த நாட்களில் அதிக விலைக்கு விற்பனை ஆகும். மற்ற நாட்களில் சராசரியான விலை கிடைக்கும். பல நாட்கள் விற்பனை ஆகாமல் மலர்கள் குப்பையில் கொட்டும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது பனி அதிகமாக உள்ளதால் பூ உற்பத்தி குறைந்துள்ளது. அதனால் நாளை தை பொங்கல் திருநாள் என்பதால் இன்று பூக்களின் விலை உயர்ந்துள்ளது. அதாவது முல்லை பூ கிலோ ரூ.2 ஆயிரம், மல்லிகை பூ கிலோ ரூ.1, 500, கனகாம்பரம் கிலோ ரூ.600, காட்டுமல்லி பூ கிலோ ரூ.1,300, சம்பங்கி பூ கிலோ ரூ.150-க்கும் விற்பனை ஆனது. கடந்த சில நாட்களாகவே இந்த விலை ஏற்றம் இருந்தது.


Next Story