பேரூராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விக்கிரவாண்டி, செஞ்சி, திருவெண்ணெய்நல்லூரில் பலவேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பேரூராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி,
ஆர்ப்பாட்டம்
தெரு மின்விளக்கு பராமரிப்பு, தூய்மை பணி, குடிநீர் திட்ட பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதை ரத்து செய்யக்கோரி விக்கிரவாண்டி பேரூராட்சி முன்பு தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்க மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் விஸ்வநாதன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
இந்த ஆர்பாட்டத்தில் நிர்வாகிகள் தண்டபாணி, பிரபா, வெங்கடேசன், கீதா, ஜெபசெல்வி, அமுதா உட்பட ஊழியர்கள் கலந்து கொண்டு தூய்மை பணி உள்ளிட்ட பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கும் ஆணையை ரத்து செய்யக் கோரியும், கீழ்நிலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும், காலி பணியிடம் நிரப்புதல், சொந்த மாவட்டத்திற்கு பணியிடமாறுதல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.
முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாரதிராஜ் நன்றி கூறினார்.
செஞ்சி
இதேபோல் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி செஞ்சி பேரூராட்சி ஊழியர்கள் செஞ்சி பேரூராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செயல் அலுவலர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். தூய்மை பணியாளர் சங்க தலைவர் ஜெயசீலன் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சரவணன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். இதில் மாவட்ட இணை செயலாளர் ரமேஷ், சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் காமராஜ், தூய்மை பணியாளர் சங்க செயலாளர் ஏழுமலை, பொருளாளர் பரசுராமன் உட்பட பேரூராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு பேரூராட்சி ஊழியர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகி சரவணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாநில செயலாளர் பாலமுருகன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க விழுப்புரம் மாவட்ட பொருளாளர் அன்பழகன், பொதுசுகாதார அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் கொளஞ்சி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், தூய்மை பணியாளர் சாந்தி, சுய உதவி குழு ஊழியர் பாக்யம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.