மாநகராட்சி குப்பைகள் கொட்டப்படும் நிலை


மாநகராட்சி குப்பைகள் கொட்டப்படும் நிலை
x

சிவகாசி மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை நாரணாபுரம் பஞ்சாயத்து பகுதியில் கொட்டப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை நாரணாபுரம் பஞ்சாயத்து பகுதியில் கொட்டப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நுண்ணுயிர் கூடம்

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 48 வார்டுகள் உள்ளன. இந்த பகுதியில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் நுண்ணுயிர் கூடங்களில் உரங்களாக உருமாற்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கடந்த சில வாரங்களாக நாரணாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ரத்தினம்நகரில் இருந்து சரஸ்வதி நகர் செல்லும் பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீச தொடங்கியது.

பொதுமக்கள் புகார்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து தலைவர் தேவராஜியிடம் புகார் தெரிவித்தனர். அவர் நேற்று காலை சம்பவ இடத்துக்கு சென்ற போது அங்கு சிவகாசி மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைகளுடன் வந்த வாகனத்தை மடக்கி பிடித்தார்.

பின்னர் இதுகுறித்து மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் சொன்னவுடன் அவர்கள் இனிவரும் காலங்களில் சிவகாசி குப்பைகள் நாரணாபுரத்தில் கொட்டப்படாது என உறுதி அளித்தனர்.

பெரும் அதிர்ச்சி

இதுகுறித்து ரத்தினம்நகர் மக்கள் கூறியதாவது:-

சிவகாசி மாநகராட்சி குப்பைகள் இரவு நேரங்களில் வாகனங்களில் கொண்டு வந்து எங்கள் பகுதியில் கொட்டி வருகிறார்கள். இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனை உடனே அகற்றி தர வேண்டும். இல்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

இதுகுறித்து நாரணாபுரம் பஞ்சாயத்து தலைவர் தேவராஜியிடம் கேட்ட போது, எங்கள் பஞ்சாயத்து பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட போதிய இடம் இல்லாமல் நாங்கள் அவதி அடைந்து வரும் நிலையில் சிவகாசி மாநகராட்சி குப்பைகள் இங்கு கொட்டப்படுவது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து யூனியன் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story