ரூ.25 லட்சத்தில் நகராட்சி பூங்கா


ரூ.25 லட்சத்தில் நகராட்சி பூங்கா
x
தினத்தந்தி 16 March 2023 6:45 PM GMT (Updated: 16 March 2023 6:46 PM GMT)

திருக்கோவிலூர் சந்தப்பேட்டையில் ரூ.25 லட்சத்தில் நகராட்சி பூங்கா அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட சந்தப்பேட்டை விஜயலட்சுமி நகரில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், நா.புகழேந்தி எம்.எல்.ஏ., திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் டி.என்.முருகன், துணைத்தலைவர் உமாமகேஸ்வரிகுணா, திருக்கோவிலூர் தி.மு.க. நகர செயலாளர் ஆர்.கோபிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் கீதா வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பூங்காவை திறந்து வைத்து, அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் சிறுவர்கள் விளையாடியதை சிறிது நேரம் பார்த்து ரசித்தார். தொடர்ந்து ரூ.45 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட கோஷா குட்டை குளத்தை திறந்து வைத்த அவர் சிறுவர், சிறுமிகள், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார். அப்போது தமிழகம் முழுவதும் வளர்ச்சி என்பது ஒரே மாதிரியாகவும், ஒரே சீராகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதே போல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பெண்களுக்கான அனைத்து நலத்திட்டங்களையும், விடுபடாமல் விரைந்து கொடுக்க வேண்டும், இளைஞர்களுக்கு விளையாட்டு சம்பந்தமான எந்த குறைகளும் இருக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தி இருக்கிறார். மேலும் பூங்கா போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை சீரமைத்து தரவும் உத்தரவிட்டிருக்கிறார் என்றார்.

இதில் திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதி, தாசில்தார் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஏகாம்பரம், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், தி.மு.க. நகர அவை தலைவர் டி.குணா, நகர வர்த்தக சங்கத் தலைவர் கே.ஏ.ராஜா, திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி என்.கே.வி.ஆதி.நாராயணமூர்த்தி மற்றும் அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஏ.எஸ்.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன் நிர்வாகி என்ஜினீயர் பாரதி நன்றி கூறினார்.


Next Story