பல்லடம் 4 பேர் படுகொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
பல்லடத்தில் 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோட முயன்றபோது மோட்டார்சைக்கிளுடன் விழுந்து அவர் காயம் அடைந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
படுகொலை வழக்கு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி கள்ளக்கிணறு குறைத்தோட்டம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 49), அவருடைய தாயார் புஷ்பவதி மற்றும் சித்தி ரத்தினம்மாள், பெரியப்பா மகன் செந்தில்குமார் ஆகிய 4 பேரும் கடந்த 3-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். வீட்டின் முன்பு மதுகுடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த கொலை நடந்தது தெரியவந்தது.
இந்த கொலை தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்கிற ராஜ்குமார்(27), இவருடைய தந்தை அய்யப்பன் (52), திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சின்னச்சாமி என்பவர் மகன் செல்லமுத்து (24), தேனி மாவட்டம் உத்தமபாளையம் முத்தாலபுரம் பகுதியை சேர்ந்த வனராஜ் மகன் விஷால் என்கிற சோனை முத்தையா (20) ஆகிய 4 பேைரயும் கைது செய்தனர். இதில் விசாரணையின் போது தப்பிக்க முயன்ற செல்லமுத்து கால் முறிவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல் வெங்கடேஷ் என்கிற ராஜ்குமார் விசாரணைக்கு போலீசார் அழைத்துச்சென்றபோது தப்பிக்க முயன்றதால் சுட்டுப்பிடிக்கப்பட்டார். இதில்2 கால் முட்டிகளிலும் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் ஒருவர் கைது
இதற்கிடையே நேற்று கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேருக்கும் அடைக்கலம் கொடுத்ததாக ராஜ்குமாரின் சகோதரர் செல்வம் என்கிற வெங்கடேசை போலீசார் தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த அவர் தலைமறைவானார். இந்த நிலையில் பல்லடம் கள்ளக்கிணறு பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை திருப்பிக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றார். அப்போது அவரை போலீசார் துரத்திச் சென்று பிடிக்க முயன்ற போது அவர் மோட்டார்சைக்கிளுடன் சாலைேயார பள்ளத்தில் விழுந்தார். இதில் அந்த வாலிபருக்கு கால்முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை செய்தபோது அவர் செல்வம் என்கிற வெங்கடேஷ் (29) என்றும், 4 பேர் படுகொலை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் அடைக்கலம் கொடுத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விரைவில் புலன் விசாரணை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.