பீர்பாட்டிலால் டெய்லர் குத்திக்கொலை; நண்பர் கைது
திருப்பூரில் மனைவியை தவறாக பேசிய டெய்லரை பீர்பாட்டிலால் குத்திக்கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்
திருப்பூரில் மனைவியை தவறாக பேசிய டெய்லரை பீர்பாட்டிலால் குத்திக்கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
டெய்லர் குத்திக்கொலை
திருப்பூர்-காங்கயம் ரோடு பெரியதோட்டம் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 27). பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து குழந்தை உள்ளது. இவருக்கும் இவருடைய நண்பர் திருப்பூர் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த பனியன் நிறுவன டெய்லரான முகமது இலியாஸ் (28) என்பவருக்கும் கடந்த 20-ந் தேதி பெரியதோட்டம் பகுதியில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முகமது இலியாசின் மனைவியை முகமது ரபீக் தவறாக பேசியதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முகமது ரபீக்கின் வீட்டுக்கு முகமது இலியாஸ் சென்று பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று கூறி அழைத்துச்சென்றுள்ளார். பின்னர் இருவரும் திருப்பூர் ரோட்டரி மின்மயானம் ரோட்டோரம் அமர்ந்து 10.30 மணி அளவில் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது மீண்டும் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த முகமது இலியாஸ், பீர்பாட்டிலால் முகமது ரபீக்கின் தலையில் அடித்ததுடன் உடைந்த பாட்டிலால் அவரின் கழுத்து மற்றும்
உடலில் குத்தியதாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் முகமது ரபீக் மயங்கி விழுந்தார். இனால் பயந்துபோன முகமது இலியாஸ் அங்கிருந்து தப்பினார்.
வாலிபர் கைது
உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் முகமது ரபீக்கை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து முகமது ரபீக்கின் மனைவி நிலோபர் நிஷா (22) அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, முகமது இலியாசை கைது செய்தனர். மனைவியை தகாத வார்த்தையால் திட்டியவரை வாலிபர் பீர்பாட்டிலால் குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.