சொத்து தகராறில் மகனை சம்மட்டியால் அடித்து கொன்ற 90 வயது முதியவர் கைது


சொத்து தகராறில் மகனை சம்மட்டியால் அடித்து கொன்ற 90 வயது முதியவர் கைது
x

பெருமாநல்லூர் அருகே சொத்து தகராறில் மகனை சம்மட்டியால் அடித்து கொன்ற 90 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்

பெருமாநல்லூர் அருகே சொத்து தகராறில் மகனை சம்மட்டியால் அடித்து கொன்ற 90 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சொத்து தகராறு

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள மேற்குபதி ஊராட்சி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 90), விவசாயி. இவருக்கு பழனிசாமி (65) என்ற மகனும், சுப்புலட்சுமி (58) என்ற மகளும் உள்ளனர். ராமசாமி தனக்கு சொந்தமான சொத்தில் ஒரு ஏக்கர் 30 சென்ட் நிலத்தை தனக்கு எடுத்துக்கொண்ட மீதி உள்ள சொத்தை, மகன் மற்றும் மகளுக்கு சரிபாதியாக பிரித்துக்கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் ராமசாமியிடம் இருந்த 1.30 ஏக்கர் நிலத்தையும் தனக்கு எழுதித்தருமாறு பழனிசாமி அடிக்கடி கேட்டு தொந்தரவு அளித்து வந்தார். இதன் காரணமாக தந்தை, மகனுக்கும் இடையே அவ்வப்போது பிரச்சினை எழுந்தது.

அடித்துக்கொலை

இதற்கிைடயில் முதியவர் ராமசாமி தன்னுடைய பெயரில் இருந்த இடத்தை வேறு நபருக்கு விற்பனை செய்ய முயன்றுள்ளார். இதனை அறிந்த பழனிசாமி, சொத்தை தனக்கு எழுதித்தரும்படி நேற்று காலை வற்புறுத்தி தகராறில் ஈடுபட்டார். இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த ்ராமசாமி அங்கு கட்டிலில் படுத்திருந்த மகன் பழனிசாமியை சம்மட்டியால் அடித்து கொலை செய்தார். பழனிசாமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர், அங்கு வந்து பார்த்தனர். பழனிசாமி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுபற்றி பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு வந்த பெருமாநல்லூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து முதியவர் ராமசாமியை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story