வெண்ணந்தூர் அருகே பிறந்தநாள் கொண்டாடிய கோவில் சிற்பி குத்திக்கொலை மதுவிருந்தின் போது வாலிபர் வெறிச்செயல்
வெண்ணந்தூர் அருகே பிறந்தநாள் கொண்டாட்ட மதுவிருந்தின் போது கோவில் சிற்பி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் அருகே பிறந்தநாள் கொண்டாட்ட மதுவிருந்தின் போது கோவில் சிற்பி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கோவில் சிற்பி
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்த ஓலப்பட்டி அருகே உள்ள ராசாபாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது சிற்ப வேலைப்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக நாகை மாவட்டம் திருக்கடையூர் கீழ வீதியை சேர்ந்த சிற்பிகளான செல்வம் மகன் செந்தில்குமார் (வயது 24), மயிலாடுதுறை அருகே திருவிழுதூர் தோப்பு தெருவை சேர்ந்த சீனிவாசன் (31) உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 2 மாதங்களாக இங்கு சிற்ப வேலை செய்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் கோவில் அருகே உள்ள வீட்டில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் செந்தில்குமாருக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் ஆகும். இதனால் நேற்று முன்தினம் இரவு சீனிவாசன், செந்தில்குமார் மற்றும் சிலர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கேக் வெட்டி கொண்டாடிய பின்னர் செந்தில்குமார் அவர்களுக்கு மதுவிருந்து வைத்தார். அப்போது அவர்கள் ஒன்றாக மது குடித்ததாக தெரிகிறது. பின்னர் மற்றவர்கள் மது குடித்து விட்டு தூங்க சென்று விட்டதாக கூறப்படுகிறது.
கத்திக்குத்து
இதையடுத்து செந்தில்குமார், சீனிவாசன் ஆகியோர் மட்டும் மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு போதை தலைக்கேறியது. அந்த சமயம் செந்தில்குமார், சீனிவாசனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன் அருகில் இருந்த கத்தியை எடுத்து செந்தில்குமாரை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி அக்கம்பக்கத்தினர் உடனடியாக வெண்ணந்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) முத்துக்கிருஷ்ணன், வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கொலையுண்ட செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம்
இதுகுறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிந்து சீனிவாசனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செந்தில்குமார் இறந்தது குறித்து அறிந்த அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் வெண்ணந்தூர் வந்து அவருடைய உடலைப்பார்த்து கதறி அழுதது உருக்கமாக இருந்தது.
பிறந்தநாளில் நடந்த மது விருந்தில் கோவில் சிற்பி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.