கொலை வழக்கில் ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை


திருவாரூர் மாவட்டம் குடவசால் அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வந்த வாலிபர் பழிக்குப்பழியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஊராட்சி தலைவர் உள்பட 9 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் குடவசால் அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வந்த வாலிபர் பழிக்குப்பழியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஊராட்சி தலைவர் உள்பட 9 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஊராட்சி தலைவர்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள மணவாளநல்லூர் ஊராட்சி தலைவராக இருந்தவர் கணேசன். இவரை கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிலர் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக எரவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணவாளநல்லூர் கீழத்தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் சந்தோஷ்குமார் (வயது28) என்பவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

ஜாமீனில் வந்தவர் கொலை

கடந்த 15-ந் தேதி ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த சந்தோஷ்குமார், தினசரி எரவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். நேற்று காலை 8 மணி அளவில் சந்தோஷ்குமார் தனது வீட்டில் வளர்த்து வரும் நாயுடன் அந்த பகுதியில் உள்ள குளக்கரைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மறைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கணேசனின் மகனும் தற்போதைய ஊராட்சி மன்ற தலைவருமான பிரபாகரன் தனது நண்பர்கள் விக்கி, கவியரசன், கார்த்தி, சாமிநாதன், தீனா, ராஜேஷ், வெங்கடேசன், மதன்குமார் ஆகியோருடன் காரில் வந்து சந்தோஷ்குமார் மீது காரை விட்டு மோதி உள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சந்தோஷ்குமாரை, பிரபாகரன் மற்றும் நண்பர்கள் அரிவாளால் கால், கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த எரவாஞ்சேரி போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று சந்தோஷ்குமாரின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி ஆகியோர் கொலை நடந்த பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பழிக்குப்பழி

மேலும் இதுதொடர்பாக எரவாஞ்சேரி போலீசில் சந்தோஷ்குமாரின் தாய் பூங்கோதை புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊராட்சி தலைவர் பிரபாகரன் உள்பட 9 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பழிக்குப்பழியாக நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story