கொல்லிமலையில் சொத்து தகராறில் விவசாயியை கல்லால் தாக்கி கொன்றேன் கைதான மகன் பரபரப்பு வாக்குமூலம்


கொல்லிமலையில்  சொத்து தகராறில் விவசாயியை கல்லால் தாக்கி கொன்றேன்  கைதான மகன் பரபரப்பு வாக்குமூலம்
x

கொல்லிமலையில் சொத்து தகராறில் விவசாயியை கல்லால் தாக்கி கொன்றதாக கைதான மகன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நாமக்கல்

சேந்தமங்கலம்:

கொல்லிமலையில் சொத்து தகராறில் விவசாயியை கல்லால் தாக்கி கொன்றதாக கைதான மகன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

விவசாயி

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூர் நாடு ஊராட்சியில் உள்ள கீழ் செங்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). விவசாயி. இவருடைய முதல் மனைவி லதா கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் செல்வராஜ், பேபி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே செல்வராஜூக்கும், அவரது முதல் மனைவியின் மகன் ராஜ்குமாருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது.

இதுதொடர்பாக தந்தை, மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி கொல்லிமலை 1-வது கொண்டை ஊசி வளைவில் லாரியில் செல்வராஜ் சென்றபோது, பேபி கண் முன்னே உறவினர்கள் சிலர் உதவியுடன் ராஜ்குமார் தனது தந்தை செல்வராஜை கல்லால் தாக்கி கொலை செய்தார். இந்த கொலை சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமார் மற்றும் தினேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

சொத்து தகராறு

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது:- தனது தந்தைக்கு சொந்தமான நிலத்தை என்னுடைய பெயரில் எழுதி தருமாறு கேட்டு வந்தேன். ஆனால் அவர் முழு நிலத்தையும் தராமல் சிறிதளவு நிலத்தை மட்டும் எழுதி கொடுத்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும் தந்தை 2-வது திருமணம் செய்து கொண்டதிலும் தனக்கு உடன்பாடில்லை.

இதனால் கோபத்தில் இருந்த நான் தந்தையை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி சம்பவத்தன்று இரவு கொல்லிமலை சாலையில் இருள்சூழ்ந்த பகுதியில் லாரியில் சென்ற தந்தையை உறவினர்கள் உதவியுடன் கல்லால் தாக்கியதில் காயம் அடைந்த அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

வீட்டு முன் அடக்கம்

இதற்கிடையே நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்து தனது கணவர் உடலை பெற்ற பேபி சொந்த ஊருக்கு கொண்டு வந்தார். பின்னர் கணவர் உடலை மயானத்தில் அடக்கம் செய்யாமல் கீழ் செங்காட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள ராஜ்குமார் வீட்டு முன்பிருந்து சுமார் 50 அடி தூரத்தில் அடக்கம் செய்தார். இந்த செயல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story