சொத்து தகராறில் முதியவர் அடித்துக்கொலை
ஒரத்தநாடு அருகே சொத்து தகராறில் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு அருகே சொத்து தகராறில் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவர் அடித்துக்கொலை
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பொய்யுண்டார் கோட்டை கிராமத்தை சேர்ந்த தனுக்கோடி மகள் சுகாமதி(வயது 43). இவரது குடும்பத்தினருக்கும், அதே ஊரை சேர்ந்த வினோத் மனைவி சுபஸ்ரீ(23) என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது.
இதுதொடர்பாக கடந்த 24-ந் தேதி ஏற்பட்ட தகராறின்போது சுகாமதியையும், அதே ஊரை சேர்ந்த அவரது சித்தப்பா தங்கராசு(70) என்பவரையும் சுபஸ்ரீ உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் சிலர் தாக்கி உள்ளனர். இதில் மயக்கம் அடைந்து கீழே விழுந்த தங்கராசுவை அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தங்கராசு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
4 பேர் மீது வழக்குப்பதிவு
இதுகுறித்து தங்கராசுவின் அண்ணன் மகள் சுகாமதி கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார், சுபஸ்ரீ உள்ளிட்ட அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.