பள்ளிபாளையத்தில் குடிபோதையில் கூலித்தொழிலாளி அடித்துக்கொலை
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையத்தில் குடிபோதையில் கூலித்தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
கூலித்தொழிலாளி
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவாரங்காடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக் (வயது 48). இவருடைய அக்காள் மகன் அய்யப்பன் (38). கூலித்தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும், தினந்தோறும் வேலையை முடித்து விட்டு இரவில் ஒன்றாக மது குடிப்பது வழக்கம் என கூறப்படுகிறது.
அதன்படி நேற்று இரவு அசோக் மற்றும் அய்யப்பன் அதே பகுதியில் உள்ள மறைவிடத்தில் அமர்ந்து மது குடித்தனர். அப்போது குடிபோதையில் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
கொலை
இதில் ஆத்திரம் அடைந்த அய்யப்பன் போதையில் இருந்த அசோக்கை அடித்து தாக்கியதுடன், அருகில் இருந்த சுவற்றில் தள்ளி விட்டதாக தெரிகிறது. இதில் சுவற்றில் மோதிய அசோக் சுருண்டு கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதையடுத்து அய்யப்பன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அக்கம் பக்கத்தினர் பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் அசோக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.