நாமகிரிப்பேட்டை அருகேமூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளைமர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


நாமகிரிப்பேட்டை அருகேமூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளைமர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Feb 2023 7:00 PM GMT (Updated: 2023-02-11T00:30:27+05:30)
நாமக்கல்

ராசிபுரம்:

மூதாட்டியை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மூதாட்டி கொலை

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே கார்கூடல்பட்டி ஊராட்சி ஒன்டிக்கடை வணங்காமுடி தோட்டத்தை சேர்ந்தவர் பாவாயி (வயது 67). இவருடைய கணவர் பொன்னுசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு கனகராஜ் (38) என்ற ஒரு மகன் உள்ளார். கனகராஜ் அபுதாபி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் அரூரில் வசித்து வருகின்றனர். பாவாயி தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பாவாயி வசித்து வந்த வீட்டில் எலக்ட்ரீசியன் பணி நடந்து வந்ததாக தெரிகிறது. மேலும் ஜன்னல் வைப்பதற்காக சுவரில் துளையிடும் பணி நடந்தது. அப்போது பாவாயியை மர்ம நபர்கள் யாரோ கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த 4 பவுன் நகை மற்றும் பீரோவில் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இந்த நிலையில் நேற்று காலையில் வெகு நேரமாகியும் பாவாயி வீட்டிலிருந்து வெளியே வராததால் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது பாவாயி படுக்கையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து பாவாயின் தங்கை செல்லம்மாள் ஆயில்பட்டி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாவாயியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிவசங்கரன் (பேளுக்குறிச்சி) கணேஷ்குமார் (நாமகிரிப்பேட்டை) மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

தடயங்கள் சேகரிப்பு

பாவாயி நகை, பணத்திற்காக கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா என்று தெரியவில்லை கொலையாளிகள் யார்? என்றும் உடனடியாக தெரியவில்லை. கொலையாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த கொலையில் துப்பு துலக்குவதற்காக நாமக்கல்லில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. சேலம் தடயவியல் நிபுணர் வடிவேலன், நாமக்கல் கைரேகை நிபுணர் சுஜித் ஆகியோர் வந்திருந்து தடயங்களை சேகரித்தனர்.

2 தனிப்படை

மேலும் கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிவசங்கரன், கணேஷ்குமார் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story