ஓசூர் அருகே பயங்கரம்:தொழிலாளி வெட்டிக்கொலைசூதாட்ட தகராறில் நண்பர்கள் வெறிச்செயல்


ஓசூர் அருகே பயங்கரம்:தொழிலாளி வெட்டிக்கொலைசூதாட்ட தகராறில் நண்பர்கள் வெறிச்செயல்
x
தினத்தந்தி 24 March 2023 12:30 AM IST (Updated: 24 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் அருகே சூதாட்ட தகராறில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

சூதாட்ட தகராறு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள காரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மகன் மோகன் (வயது 27). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் மோகன், அவருடைய நண்பர்களான சோமநாதபுரத்தை சேர்ந்த உமேஷ் (24), மூர்த்தி (29) ஆகியோர் ஓசூர் அருகே காரப்பள்ளியில் உள்ள ஏரி பகுதியில் அமர்ந்து பணம் வைத்து சூதாடினர். அப்போது சூதாட்டத்தில் உமேஷ் மற்றும் மூர்த்தி பணத்தை வென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த 2 பேரும் இரவு காரப்பள்ளியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றனர். இதற்கிடையே மோகன், தனது மற்றொரு நண்பரான மஞ்சு என்பவருடன் டாஸ்மாக் கடைக்கு சென்றார். இதையடுத்து மோகன், மஞ்சு ஆகியோர் டாஸ்மாக் கடையில் இருந்த உமேஷ், மூர்த்தியிடம் சூதாட்டத்தில் வென்ற பணத்தை திருப்பி தருமாறு கேட்டனர். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

வெட்டிக்கொலை

இதில் உமேஷ், மூர்த்தி ஆகியோர் தாக்கப்பட்டனர். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர்கள் தங்களுடைய வாகனங்களில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மோகனை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனைப் பார்த்த பயந்து மஞ்சுவும் அங்கிருந்து ஓட்டம் பிடித்து விட்டார்.

அரிவாள் வெட்டில் உடலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் படுகாயம் அடைந்த மோகனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

கைது

இதையடுத்து போலீசார் மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய உமேஷ், மூர்த்தி ஆகியோரை கைது செய்தனர்.

சூதாட்ட மோதலில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story