வனப்பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் கொடூரக்கொலை:தோழியை பலாத்காரம் செய்ததால் தலையில் கல்லை போட்டு கொன்றோம்கோர்ட்டில் சரண் அடைந்த வாலிபர்கள் பரபரப்பு தகவல்


தினத்தந்தி 7 April 2023 12:30 AM IST (Updated: 7 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பென்னாகரம்:

தோழியை பலாத்காரம் செய்ததால் தனியார் நிறுவன ஊழியரை கொடூரமாக கொலை செய்த வாலிபர்கள் 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

கொடூரக்கொலை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ளது சந்தைப்பேட்டை கிராமம். இந்த கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நேற்று முன்தினம் காலை முகம் சிதைந்த நிலையில் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது கல்லை தலையில் போட்டும், மர்ம உறுப்பை அறுத்தும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. ஆனால் கொலை செய்யப்பட்டவர் யார்?, கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தெரியவில்லை.

தனியார் நிறுவன ஊழியர்

இதையடுத்து உடல் மீட்கப்பட்டு, பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் பிணவறையில் வைக்கப்பட்டது. மேலும் கொலை தொடர்பாக ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு, உடல் நிர்வாண நிலையில் கிடந்ததால் அவர் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது கொலை செய்யப்பட்டவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளியை சேர்ந்த சசிகுமார் (வயது 45) என்பதும், அவர் ஓசூரில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது. மேலும் இவர் வசியம் செய்யும் மந்திரவாதியாகவும் இருந்துள்ளார்.

கோர்ட்டில் சரண்

இதையடுத்து போலீசார் சசிகுமாரின் மனைவி சுஜாதாவிற்கு (40) தகவல் தெரிவித்தனர். அவர் பதறி அடித்துக்கொண்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு உடலில் உள்ள அடையாளங்களை பார்த்து, கொலை செய்யப்பட்டவர், தனது கணவர் தான் என்று உறுதி செய்தார்.

இந்தநிலையில் தனியார் நிறுவன ஊழியர் சசிகுமாரை கொலை செய்ததாக தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள சி.எம்.புதூரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் தினேஷ் (28), கோவிந்தன் மகன் குணாளன் (20) ஆகியோர் பென்னாகரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அப்போது அவர்கள் கொலை செய்தது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்களை கூறினர்.

அதன் விவரம் வருமாறு:-

தோழியை காதலியாக மாற்ற வசியம்

கொலை செய்யப்பட்ட சசிகுமாரும், கொலை செய்த தினேசின் தந்தை கோவிந்தராஜும் ஓசூரில் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். மேலும் நண்பர்கள் ஆவர். இதனால் சசிகுமாருக்கும், தினேசுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சசிகுமார் வசியம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருவது, தினேசுக்கு தெரியவந்துள்ளது.

இதனால் தினேஷ், தனது தோழி ஒருவரை காதலியாக மாற்றி திருமணம் செய்ய வசியம் செய்யும் படி, சசிகுமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் அந்த இளம்பெண்ணை தனது இடத்துக்கு அழைத்து வரும்படி கூறியுள்ளார். அதன்படி தினேஷ் அந்த இளம்பெண்ணை கெலவரப்பள்ளிக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது.

இளம்பெண் பலாத்காரம்

அப்போது சசிகுமார், வசியம் செய்யும் போது ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இருக்கக்கூடாது என்று தினேசிடம் கூறியுள்ளார். இதனால் தினேஷ் அந்த இளம்பெண்ணை அறையில் விட்டு விட்டு, அங்கிருந்து சென்று விட்டார். அந்த பெண்ணின் மீது சபலம் அடைந்த சசிகுமார், அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சில மணி நேரத்துக்கு பிறகு அந்த இளம்பெண் அறையில் இருந்து அழுது கொண்டே வெளியில் வந்ததாக தெரிகிறது. மேலும் அவர் இந்த சம்பவம் குறித்து தினேசிடம் தெரிவித்துள்ளார். இதனால் தினேஷ் கடும் ஆத்திரம் அடைந்தார்.

தலையில் கல்லை போட்டு...

இந்தநிலையில் தான் தினேஷ் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் வசியம் செய்ய வேண்டும் என்று கூறி, சசிகுமாரை ஏரியூருக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வனப்பகுதியில் அவர்களும், குணாளனும் மது அருந்தி உள்ளனர். அப்போது சசிகுமாருக்கு மதுபோதை தலைக்கேறிய நிலையில், அவரை தினேசும், குணாளனும் தாக்கி உள்ளனர்.

பின்னர் அவருடைய ஆடைகளை களைந்து, மர்ம உறுப்பை அறுத்தும், தலையில் கல்லை தூக்கி போட்டும் கொடூரமாக கொலை செய்துள்ளனர். கொலை சம்பவம் குறித்த தகவல் வெளியே தெரியவந்த நிலையில் அவர்கள் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இவ்வாறு அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

சிறையில் அடைப்பு

இதையடுத்து தினேஷ், குணாளன் ஆகியோரை வருகிற 20-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி பிரவீனா உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் 2 பேருக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள் தர்மபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய பென்னாகரத்தை சேர்ந்த ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வசியம் செய்வதாக கூறி தோழியை பலாத்காரம் செய்ததால், தனியார் நிறுவன ஊழியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story