அந்தியூர் அருகே பயங்கரம்; மகனை இரும்பு குழாயால் அடித்து கொன்ற ஆட்டோ டிரைவர்- குடிபோதையில் ஊர் சுற்றியதால் ஆத்திரம்
அந்தியூர் அருகே குடிபோதையில் ஊரை சுற்றி வந்ததால் இரும்பு குழாயால் மகனை அடித்துக்கொன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
அந்தியூர்
அந்தியூர் அருகே குடிபோதையில் ஊரை சுற்றி வந்ததால் இரும்பு குழாயால் மகனை அடித்துக்கொன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
காயங்களுடன் கிடந்த வாலிபர்
அந்தியூர் அருகே உள்ள கீழ்வாணி பழனி ஆண்டவர் கோவில் வீதியில் தலையில் காயங்களுடன் நேற்று அதிகாலை வாலிபர் ஒருவர் கிடந்தார். உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவரை அந்த பகுதி மக்கள் சென்று பார்த்து விவரம் கேட்டனர். அப்போது அவர் தன்னுடைய பெயர் சிவானந்தம் என்றும், தந்தையே தன்னை இரும்பு குழாயால் 2 நாட்களாக அடித்தார்.
பின்னர் ஆட்டோவில் கொண்டு வந்து இங்கே போட்டு விட்டார் என்று பேச முடியாமல் தட்டுத்தடுமாறி கூறினார். அவரை சிகிச்சைக்கு அழைத்து செல்லவேண்டும் என்பதற்காக அப்பகுதி மக்கள் உடனே ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்து விட்டார்.
குடிப்பழக்கம்
இந்தநிலையில் ஆப்பக்கூடல் போலீஸ் சப்-இன்ஸ்ெபக்டர் கஜலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கீழ்கண்ட தகவல்கள் தெரியவந்தன.
கோபியை அடுத்துள்ள பாரியூர் நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் ராஜாமணி. ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி மகேஸ்வரி. இவர்களுடைய ஒரே மகன் சிவானந்தம் (வயது 33). திருமணம் ஆகாதவர். சிவானந்தத்துக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. எந்த வேலைக்கு செல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை திருடி அதை விற்று, அந்த பணத்தில் மதுகுடித்து வந்துள்ளார்.
இரும்பு குழாயால் அடித்தார்
மகனை நினைத்து வேதனை அடைந்த ராஜாமணி பல முறை சிவானந்தத்தை அழைத்து அறிவுரை கூறியுள்ளார். ஆனால் அவர் திருந்தவில்லை. இந்தநிலையில் அக்கம், பக்கம் மற்றும் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி சிவானந்தம் மதுகுடித்தபடி ஊர் சுற்றி வந்துள்ளார். இதற்கிடையே 2 நாட்களுக்கு முன் தந்தையின் செல்போனை எடுத்து சென்று விற்றும் மது குடித்துள்ளார். இதனால் ராஜாமணிக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
இதையடுத்து அடுப்பு ஊத பயன்படும் இரும்பு குழாயால் (ஊது குழல்) சிவானந்தத்தின் தலையில் அடித்துள்ளார். காயத்துடன் அவர் வெளியே செல்ல முயன்றதால் அவரை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து இரும்பு குழாயில் தாக்கியதாக தெரிகிறது.
தந்தை கைது
இந்தநிலையில்தான் நேற்று முன்தினம் நள்ளிரவு மயக்கநிலையில் கிடந்த மகனை தன்னுடைய ஆட்டோவில் ஏற்றி கீழ்வாணி பழனி ஆண்டவர் கோவில் வீதியில் போட்டுவிட்டு சென்றதாக தெரிகிறது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராஜாமணியை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையே நேற்று மாலை நஞ்சுண்டாபுரம் பஸ் நிறுத்தம் அருகே அவர் நிற்பதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து ெசன்று ராஜாமணியை கைது செய்தனர்.
குடிபோதையில் ஊர் சுற்றிய மகனை தந்தையே இரும்பு குழாயால் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.