தர்மபுரி அருகே தி.மு.க. கவுன்சிலரின் மகள் கழுத்தை நெரித்து கொலை; வாலிபரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை
தர்மபுரி அருகே தி.மு.க. கவுன்சிலரின் மகள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நல்லம்பள்ளி
தர்மபுரி அருகே தி.மு.க. கவுன்சிலரின் மகள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை பிடித்து ேபாலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தி.மு.க. கவுன்சிலர் மகள்
தர்மபுரி கோல்டன் தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரன். இவர் தர்மபுரி நகராட்சி 8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவருடைய மகள் ஹர்ஷா(வயது 23). ஓசூரில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி பணிக்கு சென்று வந்தார். விடுமுறை நாட்களில் தர்மபுரிக்கு இவர் வந்து செல்வது வழக்கம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஹர்ஷா தர்மபுரிக்கு வந்துள்ளார். பின்னர் பணிக்கு புறப்பட்ட அவரை சகோதரருடன் பெற்றோர் அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே நேற்று அதியமான்கோட்டை போலீசாருக்கு நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் பாறை இடுக்கில் இளம்பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
பெற்றோருக்கு தகவல்
இதையடுத்து போலீசார் விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை கைப்பற்றினர். தொடர்ந்து போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து அங்கு கிடைத்த தடயங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது இறந்து கிடந்த பெண் தி.மு.க. கவுன்சிலரின் மகள் ஹர்ஷா என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் போலீசார் ஹர்ஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் சம்பவம் நடைபெற்ற இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
கழுத்தை நெரித்து கொலை
தொடர்ந்து அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று அவர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். முதல் கட்ட விசாரணையில் ஹர்ஷா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. வீட்டில் இருந்து ஓசூருக்கு பணிக்கு புறப்பட்டு சென்ற ஹர்ஷா தர்மபுரிக்கு மீண்டும் எப்போது வந்தார்? என்பது குறித்தும், அவர் காதல் விவகாரத்தால் கொலை செய்யப்பட்டாரா? அல்லது பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? உள்பட பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஹர்ஷாவின் செல்போனை ஆய்வு செய்த போலீசார் அவருடன் கடைசியாக பேசிய நபர்கள் குறித்து சோதனை செய்தனர். அப்போது தர்மபுரி பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் செல்போனில் ஹர்ஷாவிடம் பேசி இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அந்த வாலிபரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தி.மு.க. கவுன்சிலர் மகள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.