இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மீது கொலை வழக்கு


இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மீது கொலை வழக்கு
x

நெய்வேலி போலீஸ் நிலையத்தில் வாலிபர் இறந்த வழக்கில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் என 3 பேர் மீது கொலை வழக்காக மாற்றம் செய்து கடலூர் கோர்ட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடலூர்

கடலூர்,

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் அருகே உள்ள பி.என்.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 35). இவரை கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் நெய்வேலி 3-வது வட்டத்தை சேர்ந்த யூசுப் மனைவி மும்தாஜ் (47) என்பவரை கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்த வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக நெய்வேலி டவுன்ஷிப் போலீசார், போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

அப்போது சுப்பிரமணி போலீஸ் நிலையத்திலேயே திடீரென உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார், சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதை அறிந்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், சுப்பிரமணியை போலீசார் அடித்துக் கொலை செய்து விட்டதாகவும், இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்றும் போராட்டம் நடத்தினர்.

கொலையாகாத மரணம்

இதையடுத்து இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு, விசாரணை நடந்தது. விசாரணையில் நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல், போலீஸ்காரர் சவுமியன் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு, இது கொலையாகாத மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு நடத்தும் நீதிமன்றமே முகாந்திரம் இருந்தால் கொலை மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை வழக்காக மாற்றிக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் நகலை கடலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சுப்பிரமணி தரப்பு வக்கீல்கள் தாக்கல் செய்தனர்.

கொலை வழக்கு

ஆனால் இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றம், சிதம்பரம் நீதிமன்றம் என அடுத்தடுத்து மாற்றப்பட்டது. இதனால் இந்த வழக்கில் காலதாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவின்பேரில் கடலூர் மாவட்ட சிறப்பு எஸ்.சி., எஸ்.டி. நீதிமன்றத்தில் நடந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி உத்தமராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்தனர். இதை கேட்ட நீதிபதி, இவ்வழக்கில், தொடர்புடைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, செந்தில்வேல், சவுமியன் ஆகியோர் மீது கொலை மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை வழக்காக மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

முன்னதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அரசு சிறப்பு வக்கீல் ஜீவக்குமார் ஆஜரானார்.


Next Story