சீர்திருத்த பள்ளியில் சிறுவன் கொலை - குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய பதிவாளர் நேரில் விசாரணை


சீர்திருத்த பள்ளியில் சிறுவன் கொலை - குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய பதிவாளர் நேரில் விசாரணை
x

சீர்திருத்த பள்ளியில் சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய பதிவாளர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி நிர்மலா. இவர்களது மூத்த மகன் கோகுல்ஸ்ரீ (17) கடந்த மாதம் தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே துறைக்கு சொந்தமான பேட்டரி ஒன்றை திருடிய வழக்கில் தாம்பரம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பனால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த மாதம் 29-ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட கோகுல்ஸ்ரீ ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாய் நிர்மலா செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் இருந்த கோகுல்ஸ்ரீயின் உடலை செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரீனா முன்னிலையில் வீடியோ பதிவுடன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கோகுலின் தாயிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 12-ந்தேதி செங்கல்பட்டு குற்றவியல் நடுவரால் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையும் பிரேத பரிசோதனை அறிக்கையும் பெறப்பட்டன. அதில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த கோகுல்ஸ்ரீயின் உடலில் காயம் ஏற்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பிரதீப், உத்தரவின் பேரில் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு சென்று விசாரணை செய்ததன் அடிப்படையில் சிறுவன் கோகுல்ஸ்ரீ தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக சிறுவர் சீர்திருத்தப்பள்ளி சூப்பிரண்டு மோகன் (30), உதவி சூப்பிரண்டு வித்யாசாகர் (33), வார்டன்கள் விஜயகுமார் (30), சரண்ராஜ் (36) மற்றும் ஆனஸ்ட்ராஜ் (29), சந்திரபாபு ஆகிய 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய பதிவாளர் அனு சவுத்ரி நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story