கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது


கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது
x

சென்னையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்றதாக கள்ளக்காதலனுடன் தாய் கைது செய்யப்பட்டார்.

மாங்காடு,

சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் செல்வபிரகாசம் (வயது 27). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி லாவண்யா (24). நாமக்கல்லை சேர்ந்தவர். இவர்களுக்கு 2½ வயதில் சர்வேஸ்வரன் என்ற ஆண் குழந்தையும் இருந்தது.

மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இந்த தம்பதி குழந்தையுடன் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் செல்வபிரகாசத்துக்கும், லாவண்யாவுக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் லாவண்யாவை விட்டு பிரிந்து சென்று விட்டார். மகன் சர்வேஸ்வரனுடன் லாவண்யா தனியாக வாழ்ந்து வந்தார்.

குழந்தை சாவு

இந்த நிலையில் பெற்ற மகனை பார்ப்பதற்காக கடந்த மாதம் செல்வபிரகாசம், லாவண்யாவின் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் லாவண்யா இல்லை. குழந்தை சர்வேஸ்வரன் இறந்து விட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

இதை கேட்டு செல்வபிரகாசம் அதிர்ச்சி அடைந்தார். மகன் இறந்த தகவலை தனக்கு தெரிவிக்காமல் அடக்கம் செய்து விட்டு லாவண்யா மாயமாகி விட்டதால் குழந்தையின் சாவில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எனவே இதுகுறித்து மாங்காடு போலீஸ் நிலையத்திலும், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் அவர் புகார் அளித்தார்.

அதன்பேரில் போரூர் உதவி கமிஷனர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன், மாங்காடு இன்ஸ்பெக்டர் ராஜி ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கொலை - கைது

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற மகன் என்றும் பாராமல் கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை லாவண்யா கொடூரமாக கொலை செய்தது.

இதனையடுத்து தாய் லாவண்யாவையும், அவரது கள்ளக்காதலன் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தனியார் பள்ளி வேன் டிரைவர் மணிகண்டன் (28) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் கூறியதாவது:-

கள்ளக்காதல்

லாவண்யா கல்லூரியில் படிக்கும்போது அங்கு பழக்கமான மணிகண்டனும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் மனைவியுடன் வசித்து வந்தார். இதில் மணிகண்டனுக்கும், லாவண்யாவுக்கும் மீண்டும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதனை அறிந்த மணிகண்டனின் மனைவி தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். லாவண்யாவின் கணவரும் கோபித்து கொண்டு அமைந்தகரையில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டார்.

இது கள்ளக்காதல் ஜோடிக்கு நல்ல வசதியாகி விட்டது. இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

சுவற்றில் அடித்துக்கொலை

இந்த நிலையில் செல்வபிரகாசம் தனது குழந்தை சர்வேஸ்வரனை தன்னிடமே கொடுத்து விடுமாறு கேட்டார். ஆனால் லாவண்யா மறுத்து குழந்தையை தன்னுடனே வைத்துக்கொண்டார்.

இது கள்ளக்காதலன் மணிகண்டனுக்கு பிடிக்கவில்லை. எனவே குழந்தையை துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் குழந்தையின் உடலில் தழும்புகள் இருந்துள்ளன.

சம்பவத்தன்று மணிகண்டனின் செல்போனை குழந்தை தெரியாமல் தண்ணீரில் போட்டு விட்டது. இதனால் ஆத்திரம் அடைந்து மணிகண்டன் குழந்தையை பிடித்து சுவற்றில் வேகமாக அடித்துள்ளார்.

இதில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுமயக்கம் ஏற்பட்டது. உடனே குழந்தையை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் மீண்டும் வலிப்பு ஏற்பட்டதால் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டது.

நாடகமாடினார்

ஆனால் கொலையை மறைக்க அவன் தவறி கீழே விழுந்து இறந்து விட்டதாக லாவண்யா அக்கம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். மேலும் ஆரம்பத்தில் அவர் சோகமாக இருப்பது போல நாடகமாடினார். இதனை அனைவரும் நம்பி விட்டனர்.

ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையின்போது இந்த கொலை சம்பவம் வெட்டவெளிச்சமாகி உள்ளது.

இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story