முருகன் கோவில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி; சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்


முருகன் கோவில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி; சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்
x

வள்ளியூர் முருகன் கோவில் தெப்பக்குளங்களில் இடிந்து விழுந்த கரைகளை சீரமைக்கும் பணிகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் முருகன் கோவில் தெப்பக்குளங்களில் இடிந்து விழுந்த கரைகளை சீரமைக்கும் பணிகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

முருகன் கோவில்

வள்ளியூர் முருகன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. குடவரை கோவிலான ஆலயத்தின் முன்பாக அமைந்துள்ள சரவணப் பொய்கை மற்றும் தெப்பக்குளம் என இரண்டு குளங்கள் உள்ளன. இங்கு கார்த்திகை மாதம் நடைபெறும் தெப்பத் திருவிழா சிறப்பு வாய்ந்தது. கோவிலில் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள சரவணப் பொய்கை குளத்தின் கீழ்புறப் பகுதியும், தெப்பக்குளத்தின் மேல் பகுதியும் கரைகள் இடிந்து தண்ணீருக்குள் விழுந்தன.

மேலும் வருகிற டிசம்பர் மாதம் தெப்ப உற்சவ திருவிழா நடைபெற இருப்பதால் தெப்பம் நீரில் சுற்றுவதற்கு வசதியாக பெரிய குளத்தில் இருந்து நீர் கொண்டு வரப்பட்டு 2 குளங்களிலும் நிரப்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது. தற்போது குளத்தில் நீர் குறைவாக இருப்பதாலும், மழைக்காலம் தொடங்க இருப்பதாலும் தெப்பத் திருவிழாவிற்கு முன்பாக குளத்தின் இரு கரைகளையும் சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் சபாநாயகர் அப்பாவுவிடம் கோரிக்கை விடுத்தனர்.

பணிகள் தொடக்கம்

அதன்பேரில் சபாநாயகர் அப்பாவு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு குளக்கரையை சீரமைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் ரூ.4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, உதவி ஆணையர் கவிதா, ஆய்வாளர் கோபாலன், நிர்வாக அதிகாரி ராதா, அர்ச்சகர் கணேசபட்டர், வள்ளியூர் நகரப்பஞ்சாயத்து தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் கண்ணன், தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் நம்பி, ஆதிப்பாண்டி, வள்ளியூர் நகர செயலாளர் சேதுராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோரிக்கை மனு

அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சேதுராமலிங்கம், கலைமுருகன் ஆகியோர் வள்ளியூர் பெரியகுளத்தில் இருந்து தெப்பக்குளம் தண்ணீர் வரும் கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளை சரிசெய்து தடையின்றி தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வந்து சேரும் வகையில் கால்களை சரிசெய்து தருமாறு சபாநாயகரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.


Next Story