திருப்பூரில் பல இடங்களில் முஸ்லிம்கள் திடீர் மறியல்


திருப்பூரில் பல இடங்களில் முஸ்லிம்கள் திடீர் மறியல்
x

திருப்பூர் 15 வேலம்பாளையம் மகாலட்சுமி நகரில் பள்ளிவாசல் உள்ளது. உரிய அனுமதியின்றி இந்த பள்ளிவாசல் செயல்படுவதாக அப்பகுதி குடியிருப்போர் நல சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு பள்ளிவாசலுக்கு ‘சீல்’ வைக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால் ‘சீல்’ வைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

திருப்பூர்


திருப்பூர் 15 வேலம்பாளையம் மகாலட்சுமி நகரில் பள்ளிவாசல் உள்ளது. உரிய அனுமதியின்றி இந்த பள்ளிவாசல் செயல்படுவதாக அப்பகுதி குடியிருப்போர் நல சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு பள்ளிவாசலுக்கு 'சீல்' வைக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால் 'சீல்' வைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

நடவடிக்கை

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் மகாலட்சுமிநகர் பள்ளிவாசலின் மின் இணைப்பை துண்டிப்பு செய்து 'சீல்' வைப்பு நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறையினர், காவல்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் மக்கள் திரண்டனர். அங்கு போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். 'சீல்' வைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி சந்திப்பில் மறியல்

இந்த சம்பவம் மாநகரம் முழுவதும் பரவியது. இதைத்தொடர்ந்து சி.டி.சி. கார்னர் பகுதியில் முஸ்லிம் மக்கள் காலை 9 மணி அளவில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் உஷா தியேட்டர் சந்திப்பில் மறியல் செய்தனர். தொடர்ந்து மாநகராட்சி அலுவலக சந்திப்பு பகுதிக்கு முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் திரண்டு வந்தனர். பள்ளிவாசல் 'சீல்' வைப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து, காலை 10.30 மணிக்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பழைய பஸ் நிலையத்தில் இருந்து அவினாசி ரோடு செல்லும் வாகனங்கள், குமரன் ரோட்டில் இருந்து பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு செல்லும் வாகனங்கள் அப்படியே பிரதான சாலைகளில் நின்றன.

போக்குவரத்து மாற்றம்

பல்லடம் ரோட்டில் சந்தைப்பேட்டை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. அதுபோல் தாராபுரம் ரோட்டில் வெள்ளியங்காடு நால்ரோடு வழியாகவும் வாகனங்கள் மாற்றி விடப்பட்டன. சந்திராபுரம் ரோடு வழியாகவும் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. மணிக்கணக்கில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் பிரதான சாலைகளில் நின்றன. மாநகரம் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. முக்கிய சாலையான மாநகராட்சி சந்திப்பு பகுதி சாலை முழுவதும் மறியல் காரணமாக அடைக்கப்பட்டதால் முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

முடங்கிய போக்குவரத்து

குமரன் ரோடு, அவினாசி மேம்பாலம், பழைய பஸ் நிலைய மேம்பாலங்களில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மருத்துவமனை உள்ளிட்ட அவசர தேவைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். காங்கயம் ரோடு ராஜீவ்நகர் சிக்னல் பகுதியில் பெண்கள் திரளானவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக காங்கயம் ரோட்டிலும் போக்குவரத்து முடங்கியது.

காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை தொடர்ந்தனர். மாநகரின் பல பகுதிகளில் நடைபெற்ற மறியலால் திருப்பூர் மாநகரம் முழுவதும் போக்குவரத்து முடங்கியது. மாநகர மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

திக்குமுக்காடிய மக்கள்

பழைய பஸ் நிலையத்துக்கு பயணிகள் நடந்தே வந்தனர். மாநகரின் புறவழிச்சாலை வழியாக பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் ஆங்காங்கே இறக்கி விடப்பட்டு நடந்தே மாநகருக்குள் வந்து செல்லும் நிலை ஏற்பட்டது. மாநகரம் முழுவதும் ஆங்காங்கே நடந்த மறியலால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இந்த திடீர் மறியலால் மக்கள் திக்குமுக்காடி போனார்கள்.

இந்த நிலையில் மறியலில் ஈடுபட்டதாக நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

அவசர வழக்கு

இதனிடையே வேலம்பாளையம் மகாலட்சுமி நகர் பள்ளிவாசல் பிரச்சினை தொடர்பான வழக்கு, ஐகோர்ட்டில் நேற்று அவசர வழக்காக எடுக்கப்பட்டது. வழக்கு விசாரணை வருகிற 4-ந் தேதி நடைபெறும் என்று கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே இருந்த நிலை தொடர அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து மாலை 5.15 மணிக்கு முஸ்லிம்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் திருப்பூரில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

-------

(பாக்ஸ்)

கொட்டும் மழையில் தொடர்ந்த மறியல்

பள்ளிவாசல் 'சீல்' வைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் மறியலில் ஈடுபட்ட நிலையில் நேற்று மாலை 3.30 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது. ஆனாலும் மறியலை கைவிடாமல் கொட்டும் மழையில் நனைந்தபடி அவர்கள் சாலையில் அமர்ந்து இருந்தனர்.

சிலர் தார்ப்பாய்களை பந்தலாக பிடித்தபடி அதற்குள் இருந்தபடி மறியலை தொடர்ந்தனர். சுமார் 1 மணி நேரம் மழை பெய்தாலும் மறியல் தொடர்ந்து நடைபெற்றது.



Related Tags :
Next Story