பள்ளிவாசல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை
திருப்பூரில் பள்ளிவாசல் தொடர்பான பிரச்சினைக்கு சென்னை ஐகோர்ட்டில் சட்ட ரீதியான தகவல்களை சமர்ப்பித்து நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்று தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் கூறினார்.
திருப்பூரில் பள்ளிவாசல் தொடர்பான பிரச்சினைக்கு சென்னை ஐகோர்ட்டில் சட்ட ரீதியான தகவல்களை சமர்ப்பித்து நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்று தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் கூறினார்.
பள்ளி வாசல்
திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த மகாலட்சுமிநகரில் பள்ளிவாசலுக்கு 'சீல்' வைக்க அதிகாரிகள் முயற்சி செய்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் திருப்பூர் வந்த தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் நேற்று மதியம் மகாலட்சுமி நகரில் உள்ள பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையில் கலந்து கொண்டார்.
பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திருப்பூர் 15 வேலம்பாளையம் மகாலட்சுமிநகர் பள்ளி வாசல் பிரச்சினையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறோம். மேலும் சென்னை ஐகோர்ட்டை அணுகி சட்ட ரீதியாக ஒரு நல்ல தீர்வை பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். அதன் அடிப்படையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வரை எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல், பதற்றம் தணியும் வகையில் யாரும் எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என்றும், தொடர்ந்து தொழுகை நடத்தி கொள்ளலாம் என்றும் சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தீர்ப்பு வழங்கி உள்ளது. நாளை மறுநாள் முழுமையான சட்ட ரீதியான தகவல்களை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் தமிழ்நாடு வக்பு வாரியம் மேற்கொண்டு வருகிறது.
நல்ல தீர்ப்பு கிடைக்கும்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு எந்த பாரபட்சமும் இல்லாமல், எந்த மத காழ்ப்புணர்ச்சிக்கும் இடம் கொடுக்காமல் சமத்துவத்தோடு நடத்தப்படுகிற ஆட்சி என்பதால் ஜனநாயக ரீதியாக சரியான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை நாம் பெற்றுள்ளோம்.
எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் பாதகம் வந்துவிடக்கூடாது என்றும், எல்லோரும் எல்லா உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும் என்ற வகையிலே நீதிமன்றம் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருப்பதை நாமும் நம்பி கொண்டிருக்கிறோம். அரசாங்கமும் அதில் தெளிவான நிலைபாட்டுடன் உள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் பின்னர் அப்துல் ரஹ்மான், கலெக்டர் வினீத்தை சந்தித்து பள்ளிவாசல் தொடர்பான சட்ட ரீதியான தகவல்களை சமர்பித்தார்.