முளைப்பாரி ஊர்வலத்திற்கு வரவேற்பு அளித்த முஸ்லிம்கள்
மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக முளைப்பாரி ஊர்வலத்திற்கு வரவேற்பு அளித்த முஸ்லிம்கள்
ராமநாதபுரம் புளிக்காரத்தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று 500-க்கும் மேற்பட்ட பெண்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக முளைப்பாரியை சுமந்தபடி வந்தனர். ராமநாதபுரம் சின்னக்கடை பகுதிக்கு வந்தபோது அங்கு திரளாக காத்திருந்த வெளிப்பட்டிணம் பாசிப்பட்டறை தெரு முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் இளைஞர் சங்கத்தின் சார்பில் முளைப்பாரிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவில் பூசாரிகளுக்கு ஜமாத் நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். அப்போது புளிக்காரத்தெருவின் சார்பில் முஸ்லீம் ஜமாத் நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நிகழ்ந்த இந்த வரவேற்பு அனைவரையும் நெஞ்சம் நெகிழ செய்தது. இதுகுறித்து ஜமாத் நிர்வாகிகள் கூறியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் புளிக்காரத்தெரு அம்மன்கோவில் முளைப்பாரி திருவிழாவிற்கு முஸ்லிம்கள் சார்பில் வரவேற்பு அளித்து மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறோம். இந்த ஆண்டும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இவ்வாறு கூறினர். இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலையில் கரைக்கப்பட்டது.