நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டும் - தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டும் - தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 28 Dec 2022 11:05 PM IST (Updated: 28 Dec 2022 11:45 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டும் என்று தி.மு.க. அனைத்து அணிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. ஒவ்வொரு கட்சிகளும் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றன.

அந்த வகையில் தி.மு.க.வில் உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு மாவட்ட செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மகளிர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி, தொழிலாளர் அணி, மீனவர் அணி, விவசாய அணி, வக்கீல் அணி உள்பட 21 அணிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். விளையாட்டு மேம்பாட்டு அணி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி ஆகிய 2 அணிகளும் புதிதாக உதயமாகின.

இந்த நிலையில் 23 அணிகளை சேர்ந்த மாநில நிர்வாகிகள், தேர்தல் பணிக்குழு உள்பட குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளரான அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்களான அமைச்சர்கள் க.பொன்முடி, ஐ.பெரியசாமி, எம்.பி.க்களான கனிமொழி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. எம்.பி.க்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கடந்த 1-ந் தேதி நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அணி தலைவர்களை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும் என்று கூறி இருந்தேன். அதற்காக நீங்கள் தனியாக செயல்பட கூடாது. ஜனநாயகரீதியாக ஓட்டெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மாவட்ட செயலாளர்கள். நீங்கள் நியமிக்கப்பட்டவர்கள்.

மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். நீங்களும் புதிதுபுதிதாக செயல்திறனை காண்பிக்க வேண்டும். தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை உண்டு. முன்னேற்றம் இல்லை என்று கவலைப்பட தேவையில்லை.

நான் இளைஞர் அணியில் இருந்து படிப்படியாக உழைத்து மேலே உயர்ந்து வந்துள்ளேன். அதே போன்று கட்சியின் வளர்ச்சிக்காக உழைப்பவர்களை கட்சி தலைமை மேலே கொண்டு வரும்.

ஜனவரி மாதத்துக்குள் எல்லா அணிகளிலும் கீழ்மட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும். அதே போன்ற மாவட்ட, ஒன்றிய அளவிலும் கீழ்மட்ட நிர்வாகிகளை நியமித்து, அந்த பட்டியலை கட்சி தலைமை கழகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

தி.மு.க. அனைத்து அணிகளின் செயல்பாட்டை கண்காணிக்க கட்சியின் துணை பொதுச்செயலாளர்கள் க.பொன்முடி, ஐ.பெரியசாமி, கனிமொழி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகிய 5 பேர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பாக முகவர்கள் (பூத் கமிட்டி) சரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்களா? பாக முகவர்கள் கூட்டம் முறையாக நடைபெறுகிறதா? என்பதை சட்டமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளை நியமித்து கண்காணிக்க இருக்கிறேன்.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் குறுக்கு வழியில் வெற்றியை பெற மத்தியில் ஆளும் பா.ஜ.க. எந்த கீழ்மட்ட நிலைக்கும் செல்லும். கோவையில் நடந்த பா.ஜ.க. கூட்டத்தில் ஜே.பி.நட்டா, 'தமிழகத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மாற்றம் ஏற்படும்' என்று பேசி இருக்கிறார். இதன் மூலம் அவர்கள் அதிகாரம் மற்றும் பண பலத்தை பயன்படுத்தி நமக்கு நெருக்கடி, தொந்தரவு தருவார்கள்.

அவர்களது எதிர்ப்பு, சிரமத்தை நாம் தாங்கி கொண்டு நம் ஆட்சியின் நலத்திட்டங்கள், சாதனைகள், மக்களின் செல்வாக்கு மூலம் சமாளிக்க வேண்டும். என்னுடைய உழைப்பை பற்றி நீங்கள் இந்த கூட்ட அரங்கில் பேசினால் மட்டும் போதாது, திண்ணை பிரசாரங்கள் மூலம் மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். தெருவுக்குதெரு பொதுக்கூட்டங்கள் நடத்தி நமது அரசின் செயல்பாடுகளை கொண்டு செல்லுங்கள்.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தற்போதே தயாராவோம். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 40-க்கு 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். 2024-ம் ஆண்டு தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் தி.மு.க.- அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகள் இடையேதான் நேரடி போட்டி என்ற நிலை இருந்தது. எனவே தி.மு.க. நடத்தும் ஆலோசனை கூட்டங்களில் விவாத பொருளில் அ.தி.மு.க.வை எதிர்கொள்வது பற்றிய கருத்துகள் முக்கியத்துவம் பெறுவது வழக்கம்.

ஆனால் நேற்று நடைபெற்ற தி.மு.க. அனைத்து அணிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் உள்பட அனைவரும், அ.தி.மு.க.வை பொருட்படுத்தவில்லை.

பா.ஜ.க.வின் வியூகத்தை எதிர்கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட்டு உள்ளது.


Next Story