முத்தாலம்மன் கோவில் திருவிழா
கொடைரோடு அருகே முத்தாலம்மன் கோவில்களின் திருவிழா நடந்தது.
கொடைரோடு அருகேயுள்ள பள்ளபட்டி, தெற்குதெரு (நடுப்பட்டி), கவுண்டன்பட்டி ஆகிய 3 ஊர்களில் முத்தாலம்மன் கோவில் திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்நாள் பள்ளபட்டி முத்தலாம்மன், தெற்குத்தெரு முத்தாலம்மன் ஆகிய அம்மன் அலங்காரம் செய்து பொதி மேடு என்ற இடத்தில் அம்மன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மன் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல கவுண்டன்பட்டி முத்தாலம்மன் கோவிலில் சாமி ஊர்வலமும் நடைபெற்றது.
2-வது நாள் விழாவையொட்டி இந்த 3 ஊர்களிலும் மாவிளக்கு எடுத்தல், தீ சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மன் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டார். அப்போது வழிநெடுகிலும் அபிஷேகம் செய்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். அம்மன் ஊர்வலத்தில் பக்தர்கள் வண்டியில் ராமர், லட்சுமணன், சீதை, ஆஞ்சநேயர் போன்ற வேடம் அணிந்து ஊர்வலமாக சென்றனர். குறிப்பாக கழுமரம் ஏறுதல், தேவராட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
3-வது நாள் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. மஞ்சள் நீராடுதல், நிறைவாக அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தது. இதில் சென்னை, திருப்பூர், சேலம் மதுரை, திண்டுக்கல், தேனி உட்பட பல்வேறு மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.