முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
கறம்பக்குடி அருகே முள்ளங்குறிச்சியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சொரிதலுடன் தொடங்கியது. தொடர்ந்து மண்டகபடிதாரர்கள் சார்பில் தினமும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து நேற்று திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து அம்மனை தரிசனம் செய்தனர். பெண்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும் சாமி தரிசனம் செய்தனர். நோய் தீர வேண்டி பக்தர்கள் வயிற்றில் மா விளக்கு ஏற்றியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மாலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.