மூக்கனூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் உதயசூரியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
மூக்கனூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை உதயசூரியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த மூக்கனூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன், கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா காலகட்டத்தில் திருவிழா நடைபெறவில்லை. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு ஆடி மாத திருவிழாவையொட்டி புதிய தேர் செய்யப்பட்டு நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது.
முன்னதாக ஊரணி பொங்கல் வைக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சங்கராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் கலந்து கொண்டு புதிய தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் அட்மா குழு தலைவர் ஆறுமுகம், ஊராட்சி மன்ற தலைவரும் சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சங்க தலைவருமான ஜெயக்குமார், துணைத்தலைவர் சாந்தா அர்ஜூணன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேரானது முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.