அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்
உடுமலையை அடுத்த வாளவாடி பகுதியில் குடிநீர் குழாயில் அதிகாரிகள் வால்வு பொருத்த முயன்றனர்.இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர் வினியோகம்
உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் பெரிய வாளவாடி ஊராட்சி உள்ளது. இங்குள்ள பெரியவாளவாடி, சின்ன வாளவாடி, பழையூர் கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான குடிநீர் வினியோகம் கணக்கம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
அதன் படி ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை தொட்டிகள், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 மேல்நிலை தொட்டிகள் மூலமாக நாள் ஒன்றுக்கு 6 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்காக புதிதாக ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது.
சாலை மறியல்
இந்த சூழலில் பெரியவாளவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட 5 குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்களில் வாழ்வு பொருத்துவதற்கு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முயற்சித்தனர். அதைத் தொடர்ந்து பொருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.இந்த நிலையில் நேற்று உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெ.சுகுமாரன் தலைமையில் உடுமலை உட்கோட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 50-க்கும் மேற்பட்ட பலத்த போலீஸ் பாதுகாப்போடு குடிநீர் குழாயில் வாழ்வு பொருத்துவதற்கு அதிகாரிகள் முயற்சித்தனர்.
முற்றுகை
அதைத்தொடர்ந்து ஆவேசம் அடைந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாரியம்மன் கோவில் வளாகத்தில் திரண்டு அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அதைத் தொடர்ந்து வருவாய், காவல், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பெரியவாளவாடிக்கு வழங்கப்படுகின்ற தண்ணீரை சீரான முறையில் தொட்டிகளில் ஏற்றி தருவதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் வாளவாடி பகுதியில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.மேலும் சீரான குடிநீர் வழங்கப்படவில்லை என்றால் போராட்டம் நடத்துவதற்கு முடிவு செய்து உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.